பெண்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுத்து நிறுத்த தமிழக அரசு உடனடியாக கடுமையான மற்றும் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பில் இன்று இராமநாதபுரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் ரியாஸ் கான் தலைமையில் நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தில், மாவட்ட பொதுச் செயலாளர் முகமது சுலைமான் வரவேற்புரையாற்றினார்.
மாவட்ட துணைத் தலைவர் ஜஹாங்கீர் இமாம், மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் அப்துல் ஜமீல், மகளிர் அணி மாவட்டத் தலைவர் ரம்ஜான் பேகம் ஆகியோர் சிறப்புரையாற்றி, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு குற்றவாளிகளுக்கு சட்டப்படி விரைந்து தண்டனை பெற்றுத் தருவதோடு, பெண்கள் அச்சமின்றி வாழும் சூழலை உருவாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மேலும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலைக்குரியது என்றும், இதனைத் தடுக்க அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் அப்துல் மஜீத் தொகுத்து வழங்கினார். இறுதியாக மாவட்ட செயலாளர் சகுபர் சாதிக் நன்றியுரை வழங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான கட்சியினரும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக தங்களது வலுவான கண்டனத்தையும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.









You must be logged in to post a comment.