26 June 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் ரூ.1.20 கோடி செலவில் கட்டப்பட்ட  ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்படுமா? பொதுமக்கள் கேள்வி .!

கீழக்கரையில் ரூ.1.20 கோடி செலவில் கட்டப்பட்ட  ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்படுமா? பொதுமக்கள் கேள்வி .!

எழுதியவர்: Baker BAker June 26, 2026, 6:31 pm

நகராட்சி அலட்சியத்தின் மீது நடவடிக்கை எடுத்து, மருத்துவர்களை நியமித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை

மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட மருத்துவமனை மாதக்கணக்கில் பூட்டியே கிடப்பு – உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்கள் போராட்டம் நடத்தப் போவதாக எச்சரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட புது கிழக்கு தெரு பகுதியில், ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இங்கு சிறு தொழில் மற்றும் மீனவ தொழிலை மையமாகக் கொண்டு வாழ்ந்து வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரவில்லை என்று பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு இருந்தும் கடந்த ஆண்டில் மக்கள் ஒன்று திரண்டு வைத்த கோரிக்கையின் அடிப்படையில் 2023–24 ஆம் ஆண்டுக்கான 15வது மத்திய–மாநில சுகாதார நிதித் திட்டத்தின் கீழ் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ஆரம்ப சுகாதார நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் முடங்கிக் கிடப்பது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் காலத்தில் அவசர அவசரமாக திறந்து வைக்கப்பட்ட இந்த சுகாதார நிலையம், அதன் பின்னர் முழுமையாக செயல்படுத்தப்படாமல் பூட்டியே கிடப்பதாக கூறப்படுகிறது. மருத்துவமனை கட்டிடம் தயார் நிலையில் இருந்தும், போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்படாததாலும், தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததாலும் மருத்துவ சேவை தொடங்கப்படாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், மருத்துவமனை வளாகத்திற்கு செல்லும் சாலை, சுற்றுச்சூழல் சுகாதார வசதிகள் உள்ளிட்ட அடிப்படை பணிகளை கீழக்கரை நகராட்சி நிர்வாகம் முழுமையாக நிறைவேற்றாததே தாமதத்திற்கு முக்கிய காரணமாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மக்கள் வரிப்பணத்தில் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்ட அரசு மருத்துவ கட்டிடம் பயன்பாடின்றி கிடப்பது மிகப்பெரிய நிர்வாக தோல்வி என்றும், இதுகுறித்து கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தை மாவட்ட நிர்வாகம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

எனவே, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நேரடியாக தலையிட்டு புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்து, கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தேவையான மருத்துவப் பணியாளர்களை உடனடியாக நியமித்து, அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி, மருத்துவமனையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் ஒருமித்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், மக்கள் நலனை கருத்தில் கொண்டு விரைவான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து ஜனநாயக வழியில் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய சூழல் உருவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!