ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட கருப்பூர் – காரங்காடு கிராமங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலம் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அரசுத் திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளின் அருகே, திட்ட நிதி, பணியின் மதிப்பு, பணி தொடங்கிய மற்றும் நிறைவு பெற்ற தேதி உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்கும் தகவல் பலகை கட்டாயமாக வைக்கப்பட வேண்டும். ஆனால், இந்தப் பாலத்தின் அருகே எந்தவித தகவல் பலகையும் வைக்கப்படாததால் திட்டம் குறித்த விவரங்கள் பொதுமக்களுக்கு தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், பாலம் கட்டி முடிக்கப்பட்டு குறுகிய காலமே ஆன நிலையில், அதன் பல்வேறு பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டதாகவும் மழைக்காலங்களில் வெள்ளநீர் அதிகரிக்கும் சூழலில் பாலத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி, போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நேரில் ஆய்வு மேற்கொண்டு பாலத்தின் தரத்தை பரிசோதிக்க வேண்டும் என்றும் விரிசல்கள் மற்றும் சேதங்களை அவசர கால அடிப்படையில் சீரமைத்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், பாலம் எந்தத் திட்டத்தின் கீழ், எவ்வளவு நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்டது என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வெளிப்படையாக அறிவித்து, அரசுப் பணிகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.




You must be logged in to post a comment.