வத்தலக்குண்டு அருகே அரசு டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி, கிராம பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம். பதட்டம். பரபரப்பு.
வத்தலக்குண்டு அருகே, ரெங்கப்பநாயக்கன்பட்டியில் அரசு டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி, கிராம பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அடுத்த ரெங்கப்பநாயக்கன்பட்டியில் அரசு டாஸ்மாக் மதுகடை செயல்பட்டு வருகிறது. சாலை ஓரம் உள்ள இந்த அரசு டாஸ்மார்க் மதுக்கடை வழியாக ஆண்டிபட்டி, காமாட்சிபுரம், தெப்பத்துப்பட்டி, குன்னுவாராயன்கோட்டை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், ரெங்கப்பநாயக்கன்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி, கோவில்கள் மற்றும் பேருந்து நிலையம் உள்ளது, இதன் அருகில் சாலை ஓரம் உள்ள டாஸ்மாக் மதுக்கடையால் அந்தப் பகுதியில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள், பெண்கள், மருத்துவமனைக்கு செல்பவர்கள் மற்றும் முதியவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.
சாலையோரம் மதுக்கடை உள்ளதால், அடிக்கடி இந்த சாலையில் விபத்துகள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே, ரெங்கப்பநாயக்கன்பட்டி அரசு டாஸ்மாக் மதுக்கடை அகற்றுகோரி இப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் நிலக்கோட்டை வட்டாட்சியரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால், புதன்கிழமை காலை 10 மணிக்கு ஊர்வலமாக வந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராம பெண்கள் மற்றும் பொதுமக்கள் சாலையில் இரும்பு தடுப்புகள், கற்கள், கம்பிகள் ஆகியவற்றை வைத்து சாலையில் அமர்ந்து டாஸ்மாக் மதுக்கடை அகற்ற கோரி கோஷமிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடைபெற்றதால், ரெங்கபாநாயக்கன்படியிலிருந்து ஆண்டிபட்டி மற்றும் வத்தலக்குண்டு செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நிலக்கோட்டை (பொறுப்பு) காவல் துணை கண்காணிப்பாளர் சுபகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் காவல்துறை அதிகாரியிடம் பொது மக்கள் கடும் வாக்குவாதத்தை ஈடுபட்டனர். மேலும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால், இந்த பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். கிராம பொது மக்களின் சாலை மறியல் போராட்டத்தால், இப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலக்கோட்டை வட்டாட்சியர் ஜெயபிரகாஷ் மற்றும் காவல்துறையினர் நடத்திய பேச்சு வார்த்தையில் 15 நாட்களுக்குள் டாஸ்மாக் மதுக்கடையை அகற்றுவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.




You must be logged in to post a comment.