திண்டுக்கல் மாவட்டத்தில் ஆன்லைன் விளையாட்டு மூலம் ராணுவ வீரரின் மனைவியிடம் ரூ.17.25 லட்சத்தை மோசடி செய்த தெலுங்கானா மாநிலம் ஹரீம் நகரை சேர்ந்த கங்காதரை 36, சைபர் கிரைம் போலீசார் புதுடில்லியில் கைது செய்தனர்.
நிலக்கோட்டை மட்டப்பாறையை சேர்ந்தவர் ராணுவ வீரர். இவரது மனைவி 2024ல் தனது அலைபேசியில் ‘யோ யோ’ (YoYo) எனும் விளையாட்டு செயலியை பதிவிறக்கம் செய்து ‘லுாடோ’ விளையாடினார். அந்த செயலியின் ‘சாட் ரூம்’ வழியாக சுமேஷ் என கூறி நபர் ஒருவர் அறிமுகம் ஆனார். இதன் பழக்கத்தை சாதகமாக்கி கொண்ட அந்தநபர், தனது குடும்பம் மிகவும் ஏழ்மையானது. உயிருக்கு போராடும் சகோதரிக்கு இதய அறுவை சிகிச்சை செய்யவேண்டும் எனக்கூறி பணம் பெற துவங்கினார்.
பல்வேறு தவணைகளாக ரூ.17 லட்சத்து 25 ஆயிரத்து 650-ஐ ‘கூகுள் பே’ வழியாக அந்த பெண் அனுப்பினார். சில நாட்களில் கொடுத்த பணத்தை திரும்பக்கேட்ட போது அவரின் அழைப்பை ஏற்காமல் தொடர்பை துண்டித்தார்.
மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த அவர் திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவில் சைபர் போலீசார் வங்கி கணக்கு விவரங்களை ஆய்வு செய்தனர். மோசடி நபர் தெலுங்கானா மாநிலம் ஹரீம்நகரை சேர்ந்த கங்காதர் என்பது தெரிந்தது.
அவர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வந்ததால் கங்காதருக்கு எதிராக சைபர் கிரைம் போலீசார் ‘லுக் அவுட் நோட்டீஸ்’ பிறப்பித்து அனைத்து ஏர்போர்ட் போலீஸ், குடியுரிமை அதிகாரிகளுக்கு அனுப்பினர்.
இந்நிலையில் ஜூன் 15ல் கத்தாரில் இருந்து விமானம் மூலம் புதுடில்லி வந்திறங்கிய கங்காதரை டில்லி விமான நிலைய போலீசார் பிடித்தனர்.
இத்தகவலை அடுத்து திண்டுக்கல் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ரேணுகா தலைமையிலான போலீசார் டில்லி சென்று கங்காதரை கைது செய்து திண்டுக்கல் அழைத்து வந்தனர்.
இதை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.




You must be logged in to post a comment.