தென்காசி மாவட்டத்தில் கனிம வளப் பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்ற பொதுமக்கள், அரசியல் கட்சிகள், இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், கனிம வளப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புளியரையில் ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் தி.மு. இராசேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.


கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தி.மு. இராஜேந்திரன் இன்று (21.06.2026) காலை புளியரை போக்குவரத்து மற்றும் காவல்துறை சோதனைச் சாவடிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென்காசி மாவட்டத்தில் நிலவி வரும் கனிம வளப் பிரச்சினைகள் குறித்து தமிழக கனிம வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் பிரபு அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “தனியார் நிறுவனங்கள் அரசின் அனுமதி பெற்று செயல்பட்டு வரும் நிலையில், அரசால் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். அதேவேளையில், குவாரி உரிமையாளர்கள், அரசு மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய நியாயமான விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். உள்நாட்டிலேயே கனிம வளங்களின் தேவை அதிகமாக உள்ள சூழலில், அவற்றை அயல் மாநிலங்களுக்கு அதிக அளவில் கொண்டு செல்வது சரியான நடைமுறையாகாது என்பதை அமைச்சரிடம் தெளிவாகவும் திட்ட வட்டமாகவும் எடுத்துரைத்துள்ளேன்” என்றார்.
மேலும், தனது கோரிக்கைகள் மீது அரசு விரைவில் உத்தரவு பிறப்பிக்கும் என அமைச்சர் உறுதி அளித்துள்ளதாகவும், அந்த உத்தரவுக்காக கடையநல்லூர் தொகுதி மக்களும், தென்காசி மாவட்ட மக்களும் ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து குற்றாலம் சுற்றுலா சீசனை முன்னிட்டு புளியரை சோதனைச் சாவடிகளில் நிலவும் போக்குவரத்து சூழலை ஆய்வு செய்த அவர், “தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே கனரக வாகனங்கள் இயக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தாலும், அந்த நேரத்திற்கு முன்பாகவே நூற்றுக் கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் செல்ல முயற்சிப்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க வழங்கப்படும் அனுமதிச் சீட்டுகளின் எண்ணிக்கையை குறைத்து ஒழுங்கு முறைப்படுத்த வேண்டும்” என வலியுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது மதிமுக தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் சுதா பாலசுப்பிரமணியன், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை, வழக்கறிஞர் சுரேஷ் செங்கோட்டை ஒன்றியச் செயலாளர் ரவிசங்கர், வடகரை ஷரீப், மதிமுக மாவட்ட துணைச் செயலாளர் புளியரை தங்கராஜ், செங்கோட்டை நகராட்சி தலைவர் ரஹீம், மதிமுக நிர்வாகி இலத்தூர் முருகன், தென்காசி பாராளுமன்ற தொகுதி இணையதள ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் சங்கரன் இணையதள பொறுப்பாளர் ஹமீது உள்ளிட்ட கழக நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.