ராமநாதபுரம் மாவட்டத்தின் கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்களின் நலனை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வரும் கிறித்துவ தேவாலய பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு 2022 ஆம் ஆண்டு முதல் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, விபத்து ஈட்டுறுதி உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, மூக்குக்கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல் மற்றும் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து பயன்பெற கிறித்துவ மதத்தைச் சேர்ந்த 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடர்கள், கல்லறை பணியாளர்கள், கிறித்துவ அனாதை இல்லங்கள் மற்றும் தொழுநோயாளியர் மறுவாழ்வு இல்லங்களில் பணிபுரியும் பணியாளர்கள் உள்ளிட்ட முறையான மாதாந்திர ஊதியம் பெறாத தேவாலயப் பணியாளர்கள் தகுதியுடையவர்களாக உள்ளனர்.
உறுப்பினர் பதிவு மற்றும் நலத்திட்ட உதவிகளை எளிதில் பெறுவதற்காக பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக தொலைபேசி எண் 04567-231050-ஐ தொடர்பு கொள்ளலாம். அதேபோல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரையும் தொடர்புகொண்டு தகவல்களைப் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.




You must be logged in to post a comment.