இந்தியா முழுவதும் கடந்த மே மாதம் நீட் தேர்வு நடைபெற்றது. சுமார் 22 லட்சம் மாணவ மாணவிகள் இத்தேர்வு எழுதினார்கள். தேர்வு எழுதுவதற்கு முன்பே வினாத்தாள் கசிந்து பெரும் சர்ச்சையானது. நீட் தேர்வில் முறைகேடு நடந்ததால் தேர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் தேர்வு (21.06.2026) இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் தோல்விகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என தென்காசி மாவட்டம் புளியங்குடியில் நடந்த தவ்ஹீத் ஜமாஅத் பொதுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
“அண்ணல் நபியே அழகிய முன் மாதிரி “ என்கிற பிரச்சார செயல் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) புளியங்குடி மேற்கு கிளை சார்பாக, “ருக்கையா ரலி மகளிர் இஸ்லாமிய கல்வியகத்தின்” பட்டமளிப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் மாவட்ட தலைவர் அப்துல் ஸலாம் முன்னிலையில், கிளை தலைவர் அப்துந் நாசர் தலைமையில் 20.06.2026 சனிக்கிழமை மாலை புளியங்குடி ரஹ்மத் பால்பண்ணை அருகில் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் அண்ணல் நபியே அழகிய முன் மாதிரி என்கிற தலைப்பில் A. சபீர் அலி M.I.Sc (மாநில செயலாளர்), இந்திய முஸ்லிம்கள் சந்திக்கும் சவால்கள் என்கிற தலைப்பில் S. அல் அமீன் (மாநில செயலாளர்) ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.
இந்த பொதுக்கூட்டத்தில் முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து பின்வரும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு ஊடக அறிக்கையாக வெளியிடப்பட்டது.
1. பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக தமிழகம் தழுவிய பேரணி: கோவை சூளூரில் 10 வயது சிறுமி, கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை மற்றும் ஊத்தாங்கரையில் மூதாட்டி ஆகியோருக்கு நடந்த கொடூரமான பாலியல் அத்துமீறல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தினந்தோறும் நடக்கும் இத்தகைய குற்றங்களைக் கண்டித்தும், பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான கண்டனப் பேரணிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
2. மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்தல்: மேகதாது அருகே கர்நாடக அரசு அணை கட்டுவதை எதிர்த்து, தமிழக சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து தீர்மானம் நிறைவேற்றியது வரவேற்கத்தக்கது. அதே ஒற்றுமையுடன், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்பிக்களும், எம்எல்ஏக்களும் ஒரு அணியாகத் திரண்டு, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மேகதாது அணைத் திட்டத்தை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும்.
3. ‘டெலிகிராம்’ (Telegram) சமூக வலைத் தளத் தடைக்குக் கண்டனம்: நீட் தேர்வு வினாத்தாள் கசிவைத் தடுக்க என்ற காரணத்தைக் கூறி, ‘டெலிகிராம்’ செயலியைத் தற்காலிகமாகத் தடை செய்திருப்பது கண்டனத்திற்குரியது. வினாத்தாள் கசிவுக்குத் தனிநபர் மற்றும் நிர்வாகத் தவறுகளே காரணமே தவிர, செயலி காரணம் அல்ல. இது மக்களின் கருத்துரிமையைப் பறிக்கும் செயல் மற்றும் சமூக வலைத் தளங்களை முடக்க ஒன்றிய அரசு போடும் முதற்கட்டத் திட்டமாகும்.
4. நீட் தேர்வு முறைகேடு – ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி நீக்கக் கோரிக்கை: ஒன்றிய பாஜக அரசு வரலாற்றைத் திரித்து பாடப் புத்தகங்களை உருவாக்குவதிலும், சிலரின் லாபத்திற்காக நீட் தேர்வை நடத்துவதிலும் மட்டுமே குறியாக உள்ளது. இதனால் தேர்வுகள் ரத்தாகி ஏழை மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி, தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்தத் தோல்விகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
5. பரங்கிப்பேட்டை ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது: ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனம் பரங்கிப்பேட்டை கடற்பகுதியில் 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்கத் திட்டமிட்டு உள்ளது. இதனால் மீன்வளம், மாங்குரோவ் காடுகள் மற்றும் சுற்றுச் சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் அழியும். எனவே, கடந்த காலங்களைப் போலவே ஆளும் தமிழ்நாடு அரசு இத்திட்டத்திற்கு எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது.
6. இஸ்லாமியர்களுக்கான 7% தனி இடஒதுக்கீட்டை உறுதி செய்தல்: தமிழக இஸ்லாமியர்கள் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளனர். தனது தேர்தல் அறிக்கையில் சச்சார் கமிட்டி பரிந்துரைகளை நிறைவேற்றுவோம் எனக் கூறியுள்ள தவெக, வெறும் சடங்குகளைச் செய்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், இஸ்லாமியர்களின் நீண்டகாலக் கோரிக்கையான தனி இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தித் தர உறுதியான குரல் கொடுக்க வேண்டும்.
7. டாஸ்மாக் கடைகளை மூடி பூரண மதுவிலக்கைக் கொண்டு வருதல்: ஆட்சிக்கு வந்ததும் 700 டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்ற தவெக-வின் அறிவிப்பை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரித்தது. ஆனால், சொன்னபடி பல கடைகள் இன்னும் மூடப்படாமல் தொடர்வது ஏமாற்றம் அளிக்கிறது. அரசு பொருளாதார லாபத்தைப் பார்க்காமல், சாராயக் கடைகளைத் தனியாருக்குக் கொடுக்கும் முடிவைக் கைவிட்டு, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
8. மீண்டும் நம்பகமான ‘வாக்குச் சீட்டு’ (Ballot Paper) முறைக்கு மாறுதல்: ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் (EVM) மீது எதிர்க்கட்சிகளுக்கும் பொது மக்களுக்கும் இன்னும் முழுமையான நம்பிக்கை ஏற்படவில்லை. எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளுக்குத் தேர்தல் ஆணையம் முறையான பதில் அளிக்காததால், ஜனநாயகத்தைக் காக்க மீண்டும் பழைய வாக்குச்சீட்டு முறைக்கே தேர்தல் ஆணையம் திரும்ப வேண்டும்.
9. புளியங்குடியில் புதிய தாலுகா அமைத்தல்: தென்காசி மாவட்டத்தின் மிக முக்கிய பெரிய நகரமாக புளியங்குடி வளர்ந்துள்ளது. எனவே, பொதுமக்கள் அரசு வேலைகளுக்காக நீண்ட தூரம் அலைவதைத் தவிர்க்க, புளியங்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா (வருவாய் வட்டம்) அலுவலகத்தை உடனடியாக அரசு அமைத்துத் தர வேண்டும்.
10. புளியங்குடியில் அரசு கலைக் கல்லூரி தொடங்குதல்: புளியங்குடி பகுதியில் உள்ள ஏழை, எளிய மாணவ மாணவிகள் தங்களின் உயர் கல்வியைத் தொடர வசதியாக, புளியங்குடி நகரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்றை அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும்.
11. புளியங்குடி அரசு மருத்துவ மனையை தரம் உயர்த்துதல்: புளியங்குடி அரசு மருத்துவ மனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால், தினமும் வரும் நூற்றுக்கணக்கான பொது மக்கள் பெரும் சிரமப்படுகிறார்கள். மக்களின் அவதியைப் போக்க, இந்த மருத்துவமனையை தரம் உயர்த்தி, தேவையான கூடுதல் மருத்துவர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்.
12. தென்காசி மாவட்டத்தில் சாலைகளை மேம்படுத்துதல்: தென்காசி மாவட்டத்தின் முக்கிய பிரதான சாலைகள் அனைத்தும் மிக மோசமாக குண்டும் குழியுமாக உள்ளன. இதனால் தினமும் விபத்துகள் ஏற்பட்டு மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. நெடுஞ்சாலைத்துறை உடனடியாக தலையிட்டு, இந்தச் சாலைகளைப் போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும்.
13. போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சாலை பணிகளை விரைந்து முடித்தல்: தென்காசி நகர போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கொண்டு வரப்பட்ட சுற்றுவட்டப் பாதை Ring Road) பணிகள் தொடங்கி பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் முடியாத நிலையில் உள்ளது. அதேபோல், மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் தென்காசி – திருநெல்வேலி நான்கு வழிச் சாலைப் பணியானது பல வருடங்களாக இன்னும் அரைகுறையாக ஆமை வேகத்தில் மெதுவாக நடந்து வருகிறது. பொது மக்களின் அன்றாட பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, இந்த இரண்டு சாலைப் பணிகளையும் அரசு விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
மேலும், பொதுமக்களின் அடிப்படை உரிமைகள், வாழ்வாதாரம், மாவட்ட உள்கட்டமைப்பு மற்றும் நாட்டின் ஜனநாயகம் சார்ந்த இந்த முக்கியக் கோரிக்கைகளை ஒன்றிய-மாநில அரசுகள் உடனடியாகக் கவனித்து ஆவன செய்ய வேண்டும் பொதுக் கூட்டத்தின் வாயிலாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த பொதுக் கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் ஹாஜா மைதீன், பீர் மைதீன், செய்யதலி, முகம்மது அலி பிலால், மாணவரணி செயலர் ரபீக் ராஜா, மருத்துவ அணி அப்துல்லாஹ், வர்த்தக அணி இனாமுல் ஹக் ஆகியோருடன் புளியங்குடி மேற்கு கிளை செயலாளர் முஹம்மது யூசுப், பொருளாளர் தாஜ் யூசுப் துணைத் தலைவர் நூர் முகம்மது, துணைச் செயலாளர் சம்சுதீன், புளியங்குடி அனைத்து கிளை முகமது காசிம், செய்யது இப்ராஹிம் உள்ளிட்டோருடன் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இறுதியில் கிளை செயலாளர் யூசுப் நன்றி கூறினார். பொதுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை டிஎன்டிஜே தொண்டரணியினர் செய்திருந்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.