நகராட்சி மற்றும் காவல்துறை நடவடிக்கைகளால் வாழ்வாதாரம் பாதிப்பு; மாவட்ட ஆட்சியர் உடனடி தலையீடு கோரி காத்திருப்பு போராட்டம்
ராமநாதபுரம் நகர பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல ஆண்டுகளாக சாலையோர வியாபாரம் செய்து வரும் வியாபாரிகள், நகராட்சி நிர்வாகத்தின் தொடர் நடவடிக்கைகளால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் வெளியே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட வியாபாரிகள் கூறுகையில், “சாலையோர வியாபாரிகளை அப்புறப்படுத்தக்கூடாது என்றும், அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் 2014-ஆம் ஆண்டு சட்டம் அமலில் உள்ள நிலையில், ராமநாதபுரம் நகராட்சி நிர்வாகம் அந்த சட்டத்தை மதிக்காமல் தொடர்ந்து எங்களை வியாபாரம் செய்யவிடாமல் துன்புறுத்தி வருகிறது” என்றனர்.
மேலும், நகராட்சி அதிகாரிகள் காவல்துறையினரின் உதவியுடன் திடீர் சோதனைகள் நடத்தி, வியாபாரப் பொருட்களை பறிமுதல் செய்வதோடு மட்டுமல்லாமல் சில நேரங்களில் பொருட்களை சேதப்படுத்தி எடுத்துச் செல்வதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். இதனால் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் இருக்கும் சிறு வியாபாரிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக தெரிவித்தனர்.
“பலமுறை மனுக்கள் கொடுத்தோம், போராட்டங்கள் நடத்தினோம், கோரிக்கைகள் வைத்தோம். ஆனால் எங்களது பிரச்சினைக்கு இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை. சாலையோர வியாபாரிகளை நாய்களைப் போல நடத்துகிறார்கள். நாங்கள் பிச்சை எடுக்கவில்லை; உழைத்து சாப்பிடுகிறோம். எங்களது குடும்பங்களின் வாழ்வாதாரம் இந்த வியாபாரத்தையே நம்பியுள்ளது” என்று கண்ணீருடன் வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.
குறிப்பாக பெண்கள் மற்றும் தினசரி வருமானத்தை நம்பி வாழும் சிறு வியாபாரிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு மாற்று இடம் அல்லது நிரந்தர தீர்வு வழங்காமல் தொடர்ந்து அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குற்றம்சாட்டினர்.
எனவே, மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு சாலையோர வியாபாரிகளின் உரிமைகளை பாதுகாக்கவும், நகராட்சி மற்றும் காவல்துறையினரின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தவும், வியாபாரம் செய்ய நிரந்தர இடம் ஒதுக்கி வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் வலியுறுத்தினர்.




You must be logged in to post a comment.