15 June 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நீர்ப்பிடிப்பு பகுதியில் சோலார் திட்டத்திற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு.!

நீர்ப்பிடிப்பு பகுதியில் சோலார் திட்டத்திற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு.!

எழுதியவர்: Baker BAker June 15, 2026, 7:40 pm

 

விவசாயம் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தலையிட கோரிக்கை.!

 

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் வளநாடு ஊராட்சிக்குட்பட்ட வளநாடு, சொங்கற் படை, தெயிவதனம், இந்திரா நகர் மற்றும் கருப்பிள்ளைமடம் உள்ளிட்ட ஐந்து கிராம மக்களிடையே சோலார் மின் உற்பத்தி திட்டம் தொடர்பாக கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

 

இப்பகுதிகளின் முக்கிய நீர்ப்பிடிப்பு மற்றும் விவசாய நிலப் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று சோலார் மின் உற்பத்தி திட்டத்தை அமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தேங்கும் மழைநீர் சுற்றுவட்டார விவசாய நிலங்களுக்கு முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது.

 

நீர்ப்பிடிப்பு பகுதியில் சோலார் அமைக்கப்பட்டால் மழைநீர் சேமிப்பு பாதிக்கப்பட்டு விவசாயத்திற்கு தேவையான நீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்றும், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளின் குடிநீர் தேவையும் பாதிக்கப்படும் என்றும் கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

 

மேலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளை பாதுகாப்பது அரசின் கடமை என்றும், சோலார் திட்டங்களை நீர்வள ஆதாரங்களுக்கு பாதிப்பு ஏற்படாத மேடான பகுதிகளில் செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

 

எனவே, நீர்ப்பிடிப்பு பகுதியில் நடைபெற்று வரும் சோலார் திட்டப் பணிகளை உடனடியாக நிறுத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் நீர்வள ஆதாரங்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐந்து கிராம மக்களும் அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை மனு வழங்கினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!