பள்ளி மாணவிகள் முதல் பொதுமக்கள் வரை அனைவரையும் கவர்ந்த வித்தியாசமான விழிப்புணர்வு பயணம் – பெண்கள் பாதுகாப்பில் புதிய நம்பிக்கை ஏற்படுத்திய அதிரடிப்படையினர்
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் செயல்பட்டு வரும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் இன்று கீழக்கரையில் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பொதுமக்கள், பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றன.
வழக்கமான அறிவுரைகளை வழங்கும் முறையைத் தாண்டி, மக்களுடன் நேரடியாக கைகுலுக்கி, கலந்துரையாடி, அவர்களது சந்தேகங்களுக்கு பதிலளித்து, நட்புறவுடன் விழிப்புணர்வு ஏற்படுத்திய விதம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு பெண்கள் பாதுகாப்பு, தற்காப்பு முறைகள், ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து எளிமையான மற்றும் சுவாரஸ்யமான முறையில் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் அவசர காலங்களில் காவல்துறை உதவி எண் 100-ஐ தொடர்புகொண்டு உடனடி உதவியை பெறலாம் என அறிவுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து புதிய பேருந்து நிலையம், கடற்கரை, கோயில்கள், தர்காக்கள், மதரஸாக்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் நேரடியாக சென்று பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் மக்களோடு இணைந்து செயல்பட்ட விதம் பெண்கள், மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. பலர் அவர்களுடன் புகைப்படம் எடுத்து, கைகுலுக்கி, பாராட்டுகளை தெரிவித்ததுடன், பெண்களின் பாதுகாப்பிற்காக இத்தகைய விழிப்புணர்வு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
பெண்கள் பாதுகாப்பு என்பது காவல்துறையின் பொறுப்பு மட்டுமல்ல, ஒவ்வொரு குடிமகனின் கடமையும் ஆகும் என்பதை மக்களிடம் கொண்டு சேர்த்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினரின் இந்த முயற்சி கீழக்கரையில் பொதுமக்களிடையே பாராட்டுக்குரிய நிகழ்வாக மாறியுள்ளது.


























You must be logged in to post a comment.