ராமநாதபுரம் மாவட்டம் பேராவூர் ஊராட்சியில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக முடங்கிக் கிடக்கும் சாலைப் பணியை விரைந்து முடிக்கக் கோரி, 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ராமநாதபுரம் நகரில் இருந்து பேராவூர் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் இரட்டை ஆலமரம் பகுதியிலிருந்து காட்டூரணி வழியாக இளமனூர் மற்றும் மாடக்கொட்டான் கிராமங்களுக்கு செல்லும் முக்கிய இணைப்புச் சாலையை சீரமைக்கும் பணி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. சாலையில் சரளைக் கற்கள் பரப்பப்பட்ட நிலையில், அதன் பிறகு பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படாததால் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
இந்தச் சாலை நான்கு ஊராட்சிகளை இணைக்கும் முக்கிய வழித்தடமாக இருந்து வருகிறது. தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்தச் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். சாலை சேதமடைந்துள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த நான்கு கிராமங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்திற்குள் ஒரே நேரத்தில் செல்ல முயன்ற பொதுமக்களை பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதுடன், பின்னர் தள்ளுமுள்ளு சம்பவமும் நிகழ்ந்தது.
இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.




You must be logged in to post a comment.