03 July 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவாடானை அரசு மருத்துவமனையில் குடிநீர் இல்லாமல் நோயாளிகள் அவதி: அமைச்சர் உத்தரவுக்குப் பிறகும் செயல்படாத நிர்வாகம் – பொதுமக்கள் அதிர்ச்சி.!

திருவாடானை அரசு மருத்துவமனையில் குடிநீர் இல்லாமல் நோயாளிகள் அவதி: அமைச்சர் உத்தரவுக்குப் பிறகும் செயல்படாத நிர்வாகம் – பொதுமக்கள் அதிர்ச்சி.!

எழுதியவர்: Baker BAker June 5, 2026, 4:29 pm

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அரசு தாலுகா தலைமை மருத்துவமனையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு தொடர்வதால் நோயாளிகளும் அவர்களின் உறவினர்களும் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த மருத்துவமனையில் தினசரி நூற்றுக்கணக்கான வெளிநோயாளிகளும், 10-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக நீடித்து வரும் குடிநீர் பிரச்சினை இதுவரை தீர்க்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சமீபத்தில் மருத்துவமனையை பார்வையிட்ட சுற்றுச்சூழல், மாசுக் கட்டுப்பாடு மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் வி.கே. ராஜீவ், நோயாளிகள் நலன் கருதி தனது சொந்த செலவில் குடிநீர் வசதி ஏற்படுத்துமாறு கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் வாட்டர் டிஸ்பென்சர்கள் அமைக்கப்பட்டன.

ஆனால், அவற்றில் தற்போது வரை தண்ணீர் நிரப்பப்படாமல் காலியாக உள்ளதாகவும், சில இடங்களில் திறந்த நிலையில் சுகாதாரமற்ற முறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இதனால், இலவச மருத்துவ சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் கூட குடிதண்ணீரை பணம் செலுத்தி வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அடிப்படை வசதியான குடிநீரே கிடைக்காத நிலையில் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும், உடனடியாக நிரந்தர மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், அமைச்சர் மீண்டும் அந்தப் பகுதிக்கு வர உள்ள நிலையில், பிரச்சினை தீர்வுக்காக விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!