ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கருப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்வி அமைப்பு தொடர்பாக அதிர்ச்சியூட்டும் நிலை ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
1 முதல் 5 ஆம் வகுப்பு வரை செயல்பட்டு வரும் இந்த அரசு தொடக்கப்பள்ளியில், நடப்பு கல்வியாண்டில் புதிய மாணவர் சேர்க்கை எதுவும் நடைபெறவில்லை. இதன் விளைவாக தற்போது பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் ஒரே ஒரு மாணவி மட்டுமே கல்வி பயின்று வருகிறார்.
மேலும், பள்ளியில் மொத்தம் இரண்டு மாணவர்கள் மட்டுமே இருப்பதாக கூறப்பட்டாலும், செய்தியாளர்கள் சென்ற நேரத்தில் அந்த மாணவி மட்டும் பள்ளியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மாணவிக்கான காலை மற்றும் மதிய உணவு அருகிலுள்ள படப்பை அரசு பள்ளியில் இருந்து கொண்டு வரப்பட்டு வழங்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஐந்து வகுப்புகள் செயல்படும் அரசு பள்ளியில் இவ்வளவு குறைந்த மாணவர் எண்ணிக்கை நிலவுவது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், கல்வி நிர்வாகத்தின் மீது கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
இப்பகுதியில் மாணவர் சேர்க்கை குறைவதற்கான காரணங்கள் குறித்து விரிவான ஆய்வு அவசியம் என பொதுமக்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.




You must be logged in to post a comment.