இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், விபத்தில் மூளைச்சாவு அடைந்த இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த 49 வயது ஆண் ஒருவரின் உடல் உறுப்புகள், அவரது உறவினர்களின் அனுமதியுடன் 06.06.2026 அன்று தானமாக பெறப்பட்டன.
தமிழக அரசு வழிகாட்டுதலின்படி, உறுப்பு மாற்று ஆணையம் அறிவுறுத்திய காத்திருப்பு பட்டியல் அடிப்படையில், மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த நோயாளிகளுக்கு பாதுகாப்பாக உடல் உறுப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த உறுப்பு தான மற்றும் மாற்று அறுவை சிகிச்சை நடவடிக்கைகள், இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பேராசிரியர் டாக்டர் அமுதா ராணி, வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. உறுப்பு தான பொறுப்பு மருத்துவரும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் பரணிதரன் தலைமையில், மயக்கவியல் துறை இணை பேராசிரியர் டாக்டர் சுகுமார் அறுவை சிகிச்சை துறை தலைமை மருத்துவர் டாக்டர் மலர்வண்ணன் டாக்டர் வினோத் மயக்கவியல் உதவி பேராசிரியர் டாக்டர் வள்ளிபிரியா ஆகியோர் இணைந்து வெற்றிகரமாக ஒருங்கிணைத்தனர்.
மேலும், உறுப்பு மாற்று ஒருங்கிணைப்பாளராக சூர்யா பணியாற்றினார். மருத்துவமனை நிர்வாகத்தின் முழு ஒத்துழைப்புடன் இந்த உறுப்பு தான அறுவை சிகிச்சை சிறப்பாக நிறைவேற்றப்பட்டது.
உறுப்பு தானம் செய்த நபருக்கு அரசு வழிகாட்டுதலின்படி அரசு மரியாதை செலுத்தப்பட்டு, அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த உறுப்பு தானத்தின் மூலம் 5 நோயாளிகள் புதிய வாழ்வைப் பெற்றுள்ளனர்.
மருத்துவமனை நிர்வாகம் சார்பில், மறைந்தவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலும், நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




You must be logged in to post a comment.