29 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வைகாசி விசாக திருவிழா: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்தில் வெகு விமர்சையான தேரோட்டம்.!

வைகாசி விசாக திருவிழா: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்தில் வெகு விமர்சையான தேரோட்டம்.!

எழுதியவர்: Baker BAker May 29, 2026, 7:58 pm

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் அமைந்துள்ள அருள்மிகு சினேகவல்லி உடனமர் ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்தில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இவ்வாலயம் வரலாற்று சிறப்புமிக்க சிவாலயமாக விளங்குகிறது. மேலும், பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட 14 சிவ ஸ்தலங்களில் ஒன்றாகவும் இக்கோவில் போற்றப்படுகிறது.

திருவிழா கடந்த மே 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சுவாமி வீதி உலா நடைபெற்றது.

ஒன்பதாம் நாள் திருவிழாவையொட்டி இன்று நடைபெற்ற தேரோட்டத்தில், அருள்மிகு சினேகவல்லி அம்மன் சமேத ஆதிரெத்தினேஸ்வரர் சுவாமிகள் கோவிலில் இருந்து புறப்பட்டு தேருக்கு எழுந்தருளினர்.

இரண்டு தேர்களில் பெரிய தேரில் ஆதிரெத்தினேஸ்வரர் பிரியாவிடையுடனும், சின்ன தேரில் சினேகவல்லி அம்மனும் வீற்றிருந்தனர். பின்னர் பக்தர்கள் வடம் பிடித்து இரண்டு தேர்களையும் ஒன்றன் பின் ஒன்றாக இழுத்து, திருவாடானை நான்கு தெருக்கள் வழியாக வீதி உலா நடத்தினர்.

சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் தேர்வடம் பிடித்து இழுத்தனர். வழிநெடுகிலும் சங்கொலி முழங்கியதுடன், பக்தர்களுக்காக பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல்களும் அமைக்கப்பட்டிருந்தன.

தேர்கள் நிலைக்கு வந்த பின்னர், தேர்வந்த தடம் பார்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிகள் மீண்டும் கோவிலுக்கு எழுந்தருளினர்.

நாளை நடைபெறும் தீர்த்தவாரியுடன் வைகாசி விசாக திருவிழா நிறைவுபெற உள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!