தமிழ்நாடு முழுவதும் கல்குவாரிகளில் அதிரடி சோதனை
விதிமீறலில் செயல்பட்ட 67 கல்குவாரிகள் தற்காலிகமாக நிறுத்தம் – 469 வாகனங்கள் பறிமுதல்
தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் கல்குவாரிகளில் விரிவான சோதனைகள் நடத்துமாறு மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு அவர்கள் வழங்கிய உத்தரவின் பேரில், கனிம வளத்துறை அலுவலர்கள் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது, விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 67 கல்குவாரிகள் கண்டறியப்பட்டு, அவற்றின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன.
மேலும், உரிய அனுமதியின்றி கனிமங்களை ஏற்றிச் சென்ற 469 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதோடு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 78 இடங்களில் சட்டவிரோதமாக கனிமங்கள் எடுக்கப்பட்டு வந்ததும் கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடைமுறையில் உள்ள விதிகளின்படி சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனிம வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இயற்கை வளங்களை பாதுகாக்கவும், சட்டவிரோத கனிமச் சுரங்க நடவடிக்கைகளை முற்றிலுமாக தடுக்கவும் அரசு உறுதியாக செயல்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.




You must be logged in to post a comment.