28 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மங்களக்குடியில் ஈதுல் அல்ஹா பெருநாள் தொழுகை: 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.!

மங்களக்குடியில் ஈதுல் அல்ஹா பெருநாள் தொழுகை: 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.!

எழுதியவர்: Baker BAker May 28, 2026, 11:09 am

இராமநாதபுரம், ஜூன் — துல்ஹஜ் மாதத்தின் பிறை பத்தாம் நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் ஈதுல் அல்ஹா எனும் தியாகப் பெருநாளை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக இராமநாதபுரம் வடக்கு மாவட்டம் மங்களக்குடி மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில் நபிவழிப்படி திறந்த திடலில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இந்த தொழுகைக்கு மாவட்டத் தலைவர் முகவை அப்பாஸ் தலைமை தாங்கினார்.

தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டப் பேச்சாளர் மௌலவி அஜ்மத் கான் பெருநாள் சிறப்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், ஹஜ்ஜுப் பெருநாள் என்பது இறைத்தூதர் இப்ராஹிம் (அலை) அவர்களின் தியாக வாழ்க்கையை நினைவூட்டும் நாளாகும் என்றும், இந்த நாளில் இறைவனுக்காக பலியிடப்படும் பிராணிகளின் இறைச்சி ஏழை, எளிய மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவது இஸ்லாத்தின் மனிதநேயப் பண்பை வெளிப்படுத்துவதாகும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், இஸ்லாமியர்கள் தாங்கள் வாழும் சமூகத்தின் நன்மை மற்றும் வளர்ச்சிக்காக தங்களுடைய செல்வம், உடல் உழைப்பு மற்றும் திறமைகளால் இயன்ற தியாகங்களைச் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். பாலஸ்தீனத்தில் தொடர்ந்து உயிரிழந்து வரும் அப்பாவி மக்களின் நலனுக்கும் மறுவாழ்விற்கும் அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.

இந்நாளில் சமத்துவமும் சகோதரத்துவமும் இந்தியா முழுவதும் நிலைத்திருக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் (பொறுப்பு) பாதுஷா, பொருளாளர் அப்துர் ரஹ்மான், துணைச் செயலாளர் முகமது ஆதில், மருத்துவ அணி செயலாளர் பைசல் ரஹ்மான், வர்த்தக அணி செயலாளர் முஜிபுர் ரஹ்மான், தொண்டரணி செயலாளர் தாஜ் முகமது, மாணவரணி செயலாளர் நஜீம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் ஆண்கள், பெண்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 600-க்கும் மேற்பட்டோர் பெருநாள் தொழுகையில் பங்கேற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!