12ஆம் வகுப்பில் 97%, 10ஆம் வகுப்பில் 95% தேர்ச்சி – மாணவிகளை பாராட்டிய எம்.எல்.ஏ சுனில் ஆனந்த்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 2025–2026 ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்வுகளில் சிறப்பான தேர்ச்சி விகிதம் பெற்று பள்ளிக்கும் மேட்டுப்பாளையம் நகருக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயிலும் இப்பள்ளியில், மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வில் 97 சதவீத மாணவிகளும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 95 சதவீத மாணவிகளும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இந்த வெற்றியை பாராட்டும் வகையில், மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் சுனில் ஆனந்த் பள்ளிக்கு நேரில் சென்று மாணவிகளுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியை, உதவி தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பாட்ஷா, தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள், மேட்டுப்பாளையம் தாலுகா சி.ஐ.டி.யு பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் பள்ளி வளர்ச்சிக்கும், மாணவிகள் பயன்பாட்டிற்கும் தேவையான வசதிகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் கேட்டறிந்தார். மாணவிகளின் விளையாட்டு திறனை மேம்படுத்த விளையாட்டு மைதானம் அவசியம் தேவை என பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பாட்ஷா வலியுறுத்தினார்.
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் அமுதா, நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் செய்து தரப்படும் என உறுதியளித்தார்.




You must be logged in to post a comment.