24 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » சுட்டெரிக்கும் கத்தரி வெயில்: பள்ளிகள் திறப்பை ஒரு வாரம் தள்ளிவைக்க எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

சுட்டெரிக்கும் கத்தரி வெயில்: பள்ளிகள் திறப்பை ஒரு வாரம் தள்ளிவைக்க எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

எழுதியவர்: Askar May 24, 2026, 10:48 am

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, பள்ளிகள் திறப்பதை ஒரு வார காலத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் முகம்மது முபாரக் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தமிழகத்தில் நடப்பாண்டில் கோடை வெயிலின் தாக்கம் தற்போது நாளுக்கு நாள் மிகத் தீவிரமாகி வருகிறது. சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெப்ப நிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டிப் பதிவாகி வருவதால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் கடுமையான அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், நிலவி வரும் வெப்ப அலை காரணமாக மதிய நேரங்களில் மக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு மருத்துவத் துறையினரும் அறிவுறுத்தியுள்ளனர்.

இத்தகைய அசாதாரணமான சூழலில், கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய கடும் வெப்ப நிலையை சிறுவர், சிறுமியர் மற்றும் பள்ளி மாணவர்கள் எதிர்கொள்வது அவர்களின் உடல்நலனைப் பெரிதும் பாதிக்கும்.

எனவே, மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பள்ளிகள் திறப்பை மேலும் ஒரு வார காலத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பில் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இந்த ஒரு வார கால நீட்டிப்பு மாணவர்களின் கல்விப் பாதையில் எவ்வித தொய்வையும் ஏற்படுத்தாது என்பதால், முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு உரிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என அவர் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!