ராமநாதபுரம் மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்டும், சென்னை குரோம்பேட்டையில் மருத்துவராக பணியாற்றியும் வரும் ஹாலிக் அலாவுதீன் (32) என்பவர், குயவன்குடி கிராமத்தில் உள்ள 1 ஏக்கர் 98 சென்ட் நிலத்தை தனது தாயார் பெயரில் பதிவு செய்ய வெளிப்பட்டிணம் சார்பதிவாளர் இராமநாதனை அணுகியுள்ளார்.
அப்போது, பத்திரப் பதிவு செய்ய ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஹாலிக் அலாவுதீன், வேறு வழியின்றி ரூ.3 லட்சத்தை சார்பதிவாளரின் வங்கி கணக்கிலும், ரூ.17 லட்சத்தை ஆயூப்கான் என்பவரிடமும் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, கடந்த 18.05.2026 அன்று மீண்டும் பத்திரப் பதிவு தொடர்பாக சார்பதிவாளரை சந்தித்தபோது, மீதமுள்ள ரூ.25 லட்சம் வழங்கினால்தான் பதிவு செய்ய முடியும் என கூறியுள்ளார். பின்னர், ரூ.10 லட்சம் குறைத்து ரூ.15 லட்சம் கேட்டதுடன், அதில் ரூ.3 லட்சத்தை ரொக்கமாக ஆயூப்கானிடம் மற்றும் ரூ.12 லட்சத்தை குறிப்பிட்ட வங்கி கணக்கில் செலுத்துமாறும் தெரிவித்துள்ளார்.
லஞ்சம் வழங்க விரும்பாத ஹாலிக் அலாவுதீன், இராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியிடம் புகார் அளித்தார். அதன் பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ.3 லட்சம் பணத்தை ஆயூப்கானிடம் வழங்கியபோது, ஆயூப்கான் (53) மற்றும் வெளிப்பட்டிணம் சார்பதிவாளர் இராமநாதன் (59) ஆகியோரை இன்று (21.05.2026) கையும் களவுமாக கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






You must be logged in to post a comment.