20 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » புதிய ஆலயத்திற்கு நிலம் தானமாக வழங்கிய குடும்பத்தினருக்கு கௌரவம் .! ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.!!

புதிய ஆலயத்திற்கு நிலம் தானமாக வழங்கிய குடும்பத்தினருக்கு கௌரவம் .! ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.!!

எழுதியவர்: Baker BAker May 20, 2026, 11:05 pm

நான்கு வழிச்சாலை விரிவாக்கத்தால் இடமாற்றம்: வழுதூர் அருளொளி விநாயகர் ஆலயத்திற்கு பாலாலயம்

ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு – புதிய ஆலயத்திற்கு நிலம் தானமாக வழங்கிய குடும்பத்தினருக்கு கௌரவம்

ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை ஊராட்சிக்குட்பட்ட வழுதூர் அருளொளி நகர் பகுதியில் அமைந்துள்ள சுமார் 60 ஆண்டுகள் பழமையான அருளொளி விநாயகர் ஆலயம், நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிகளால் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இதனை முன்னிட்டு விநாயகர் பெருமானுக்கு பாலாலய விழா சிறப்பாக நடைபெற்றது.

பரமக்குடி – அரியநேந்தல் முதல் வழுதூர் வரை 47 கிலோமீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சாலைப் பணிக்காக ஆலயம் அமைந்திருந்த சுமார் 10 சென்ட் நிலம் முழுமையாக கையகப்படுத்தப்பட்டதால், வழுதூர் கிராம பொதுமக்கள் கவலையடைந்தனர்.

இதையடுத்து, வழுதூர் கிராமத்தைச் சேர்ந்த நாகரத்தினம் மற்றும் அவரது சகோதரர் கார்மேகம் குடும்பத்தினர் சார்பில், புதிய விநாயகர் ஆலயம் அமைக்க 5 சென்ட் நிலம் தானமாக வழங்க முன்வந்தனர். இதனால் கிராம மக்கள் மற்றும் அருளொளி மன்ற நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பாலாலய விழாவில், வேத மந்திரங்கள் முழங்க மேளதாளத்துடன் விநாயகர் பெருமான் எழுந்தருளச் செய்து புதிய இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. பனைக்குளம் ஆத்ம சாந்தி நிலைய நிர்வாகிகள் ஆறுமுகம் ஆசிரியர், ஈஸ்வர சரவணன், மோகன், சந்திரசேகர் ராஜா மற்றும் வழுதூர் அருளொளி மன்ற நிர்வாகிகள் முன்னிலையில் விழா நடைபெற்றது.

கடந்த 7.9.1967 அன்று தவத்திரு சித்ரமுத்து அடிகளார் தவப்பணியின் போது விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் இவ்வாலயம் பக்தர்களின் பெரும் நம்பிக்கைக்குரிய தலமாக விளங்கி வந்தது.

மேலும், 2017ஆம் ஆண்டு ஆலயத்தின் 50ஆம் ஆண்டு விழா மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது.

தற்போது வழுதூர் அருளொளி நகர் பகுதியில் புதிய ஆலயம் கட்டும் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளன. பாலாலயத்திற்குப் பிறகு விநாயகர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றதுடன், பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.

விழாவில் வழுதூர் கிராம பொதுமக்கள், அருளொளி மன்ற நிர்வாகிகள், தாய் வீடு ஆத்ம சாந்தி நிலைய பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

மேலும், ஆலயத்திற்கான நிலத்தை தானமாக வழங்கிய நாகரத்தினம் – கார்மேகம் குடும்பத்தினருக்கு பொன்னாடை அணிவித்து பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!