18 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » நகராட்சி » பிரச்சனை » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் வெறிநாய்கள் அட்டகாசம் சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் .!

கீழக்கரையில் வெறிநாய்கள் அட்டகாசம் சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் .!

எழுதியவர்: Baker BAker May 18, 2026, 3:39 pm

நகராட்சி மெத்தனப் போக்கால் பொதுமக்கள் அச்சம் – மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கடும் எதிர்ப்பு

 

 

 

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளிலும் வெறிநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். குடியிருப்பு பகுதிகள், முக்கிய சாலைகள், பள்ளி மாணவர்கள் மற்றும் பெண்கள் அதிகம் பயன்படுத்தும் தெருக்கள் உள்ளிட்ட இடங்களில் வெறிநாய்கள் கூட்டமாக சுற்றித்திரிவது பொதுமக்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

 

சமீப காலமாக வீட்டு வளர்ப்பு பிராணிகள் காணாமல் போவது, இரவு நேரங்களில் தெருக்களில் வெறிநாய்கள் சண்டையிட்டு அச்சுறுத்துவது, பொதுமக்களை துரத்தி கடிக்க முயல்வது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ஒரு செல்லப்பிராணியை வெறிநாய்கள் துரத்தி கடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் வெளியே செல்ல கூட அச்சப்படும் நிலை உருவாகியுள்ளது.

 

இந்த பிரச்சினை குறித்து பொதுமக்கள் பலமுறை கீழக்கரை நகராட்சி நிர்வாகத்திற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் மனுக்கள் அளித்தும் இதுவரை எந்தவித நிரந்தர நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

 

வெறிநாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், தடுப்பூசி முகாம்கள், பிடிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை முறையாக நடைபெறவில்லை என்றும் பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

 

 நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கையும் செயலற்ற தன்மையையும் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பதே இந்நிலைக்கு முக்கிய காரணம் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக முதலமைச்சர் நேரடியாக கீழக்கரைக்கு வந்து நிலைமையை பார்வையிட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து உடனடி தீர்வு காண வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

 

மேலும் தெருநாய்கள் கட்டுப்பாடு, நிரந்தர கண்காணிப்பு குழு அமைத்தல், பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள், இரவு நேர கண்காணிப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!