பெட்ரோல் – டீசல் விலை தொடர்ந்நு பலமுறை உயர்த்தப்பட்டு பொது மக்கள் பல சிரமங்களை சந்தித்து வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்திய ஒன்றிய அரசுக்கு கம்யூனிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது பற்றிய கண்டன அறிக்கையில், சென்னையில் லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 3.10 உயர்ந்து 103.90க்கும், டீசல் லிட்டருக்கு ரூ. 3.08 உயர்ந்து 95.47க்கும் விற்பனை ஆகிறது. ஆட்டோ, கால்டாக்சி, டெலிவரி ஊழியர்கள் இந்த விலை உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். ஏற்கெனவே சமையல் எரிவாயு பற்றாக் குறையால் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போது பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் லாபம் பார்த்த ஒன்றிய அரசு இப்போது விலை உயர்ந்த போது அதன் சுமையைப் பொது மக்கள் மீது சுமத்தியுள்ளது. இதன் தாக்கம் தொடர் வினையாகப் பல்வேறு தொழில்களிலும் எதிரொலிக்கும். சிறுதொழில்கள் முடங்கிப்போகும் அபாயமுள்ளது. தன் இயலாமைக்கு மக்களைப் பலியாக்குகிறது ஒன்றிய அரசு. உடனடியாக இந்த விலையுயர்வை திரும்பப் பெற வேண்டும் எனக் கோருகிறேன் என வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.




You must be logged in to post a comment.