திருவாடானை மக்களின் நம்பிக்கைக்கு நன்றி – அரசு மருத்துவ வசதிகள் மற்றும் குடிநீர் பிரச்சினைக்கு முன்னுரிமை : எம்.எல்.ஏ. வி.கே. ராஜீவ் உறுதி
பிரசவ வார்டு, இலவச சேவை மையம், இரட்டை சட்டமன்ற அலுவலகம் உள்ளிட்ட மக்கள் நல திட்டங்கள் விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றுள்ள வி.கே. ராஜீவ் அவர்கள் இன்று திருவாடானை சட்டமன்ற அலுவலகத்திற்கு வருகை தந்து பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். முன்னதாக அவர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திருவாடானை மக்களின் நம்பிக்கைக்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றி. மக்களின் அடிப்படை தேவைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், திருவாடானை அரசு மருத்துவமனையில் தனியாகப் பிரசவம் பார்க்கும் வகையில் நவீன வசதிகளுடன் பிரசவ வார்டு அமைக்கப்படும் என்றும், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் முழுமையான மருத்துவ சேவைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
தொகுதி முழுவதும் நீடித்து வரும் குடிநீர் பற்றாக்குறையை போக்க முன்னுரிமை அடிப்படையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
மக்கள் சேவையை எளிதாக்கும் நோக்கில் திருவாடானை மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் இரண்டு சட்டமன்ற அலுவலகங்கள் செயல்படும் என்றும், அந்த அலுவலகங்கள் மூலம் பொதுமக்கள் அனைத்து வகையான அரசுச் சான்றிதழ்களையும் கட்டணமின்றி பெற “இலவச சேவை மையம்” தொடங்கப்படும் என்றும் கூறினார்.
இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், உள்ளூர் பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.




You must be logged in to post a comment.