இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் உட்கோட்டம், உச்சிபுளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுமடம் மேற்கு தெருவை சேர்ந்த அப்துல் சுக்குருவின் மனைவி சகுபர் நிஷா என்பவரின் வீட்டில் கடந்த 28.04.2026 அன்று அதிகாலை திருட்டு சம்பவம் நடைபெற்றது.
அன்று காலை 5.00 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு தென்னந்தோப்பிற்கு சென்றிருந்த சகுபர் நிஷா, காலை 6.00 மணியளவில் வீடு திரும்பியபோது வெளிக்கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த 21.7 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.61,910 பணம் அடையாளம் தெரியாத நபர்களால் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும், இராமேஸ்வரம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து உச்சிபுளி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், உச்சிபுளி காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சம்பவம் நடைபெற்ற வீட்டின் அருகே வசித்து வந்த கோபிநாத் மற்றும் சேதுபதி ஆகியோர் சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்டதில், அவர்கள் திருட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து திருடப்பட்ட 21.7 சவரன் நகைகள் மற்றும் ரூ.61,910 முழுமையாக மீட்கப்பட்டது. பின்னர் அவர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்து, திருடப்பட்ட பொருட்களை மீட்ட தனிப்படை காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் பாராட்டினார்.





You must be logged in to post a comment.