தமிழகம் முழுவதும் மீன்களின் இனப்பெருக்க காலத்தைக் கருத்தில் கொண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க அரசு தடை விதித்துள்ள நிலையில், இந்த தடை காலத்தை பயன்படுத்தி ராமநாதபுரம் பகுதியில் அழுகிய மற்றும் கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டு படகு மற்றும் வல்லம் மூலம் கரையோரங்களில் பிடிக்கப்படும் மீன்கள் மட்டுமே சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் சூழலில், சில மீன் வியாபாரிகள் கெட்டுப்போன மீன்களை ஐஸில் பதுக்கி வைத்து மீண்டும் மீண்டும் விற்பனை செய்ததாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனால் முதியவர்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலர் உடல்நலக்குறைவுக்கு ஆளானதாக கூறப்பட்டது.
பொதுமக்கள் புகாரின் பேரில், ராமநாதபுரம் அருகே ராம் நகர் பகுதியில் உள்ள மீன் கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் டாக்டர் சுரேஷ் தலைமையில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் அழுகிய மீன்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த ஐந்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கண்டறியப்பட்டனர். அவர்களிடமிருந்து சுமார் 30 கிலோவுக்கும் அதிகமான கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டன.
மேலும் சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காவல்துறையின் மூலம் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
மாவட்டம் முழுவதும் தொடர்ந்து சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும், மீன்பிடி தடை காலத்தை பயன்படுத்தி பொதுமக்களிடம் அதிக விலைக்கு தரமற்ற அல்லது கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சோதனையில் உணவுத்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் இணைந்து செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.








You must be logged in to post a comment.