கீழக்கரையில் புதிய கூடுதல் அரசு மருத்துவமனை கட்டிடம் ரூ. 900.00 லட்சம் 15 வது மத்திய நிதி ஆணைய சுகாதார மானிய திட்டம் 2023 24 நிதித் திட்டம் முடங்கியது – நகராட்சி நிர்வாகம், அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் 50,000-க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கடல் தொழில், மீன்வளம் மற்றும் சிறு தொழில்களை நம்பி வாழும் இப்பகுதி மக்களுக்கு தரமான அரசு மருத்துவ சேவை என்பது அத்தியாவசிய தேவையாக உள்ளது. ஆனால், பல ஆண்டுகளாக கீழக்கரை தாலுகா அரசு மருத்துவமனை கட்டிடம் பழுதடைந்த நிலையிலும், மருத்துவர்கள் பற்றாக்குறை, செவிலியர் தட்டுப்பாடு, போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாமை போன்ற பிரச்சினைகள் தொடர்ந்து நிலவி வருகின்றன.
இதனால், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு நல அமைப்புகள் இணைந்து மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும், கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வேண்டும், புதிய கட்டிடம் அமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன் அடிப்படையில் ரூ. 900.00 லட்சம் மதிப்பீட்டில் 15வது மத்திய நிதி ஆணைய சுகாதார மானிய திட்டம் 2023 24 நிதித் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்து 2023 ஆம் ஆண்டு புதிய கூடுதல் அரசு மருத்துவமனை கட்டிடம் கட்டுதல் பணி தொடங்கப்பட்டது.
திட்டத்தின் படி, 12 மாதங்கள் ஒப்பந்த காலம் அறிவித்தும் திட்டப்பணிகள் முழுமையாக நிறைவேறாமல் நீண்ட ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால், மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மேலும் கட்டிட பணி நடைபெறுவதற்கு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் என்று கடந்த மாதம் நடைபெற்ற கீழக்கரை நகர்மன்ற கூட்டத்தில், கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதற்கு 20வது வார்டு கவுன்சிலர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து:
ஆரம்ப ஒதுக்கீட்டில் பணிகளை முடிக்க முடியாததற்கு யார் பொறுப்பு?
சரியான தொழில்நுட்ப மதிப்பீடு ஏன் வழங்கப்படவில்லை?
அரசு நிதி திட்டங்களில் அலட்சியம் நடந்ததா?
ஒப்பந்ததாரர் பணிகளை முழுமையாக செய்தாரா? பணிகள் பற்றிய மதிப்பீட்டை நகராட்சி பொறியாளர் முறையாக செய்தாரா ? என பல கேள்விகளை எழுப்பினார்.
மேலும், நகராட்சி பொறியாளர் ஆரம்பத்தில் துல்லியமான மதிப்பீடு அளித்திருந்தால், பொதுமக்களின் வரிப்பணத்தில் கூடுதல் சுமை ஏற்படாமல் இருந்திருக்கும் என குற்ற சாற்றும் எழுந்தது .
இதற்கு பதிலளிக்காமல் நகராட்சி பொறியாளர் கூட்டத்திலிருந்து வெளியேறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் கீழக்கரை மக்களும் சமூக ஆர்வலர்களும் தற்போது புதிய மருத்துவமனை கட்டிடத்தை உடனடியாக நிறைவு செய்ய வேண்டும் , கட்டுமான தாமதத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் , ஒப்பந்ததாரரின் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் , அரசு நிதி முறைகேடு நடந்ததா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் ,மருத்துவமனையை விரிவுபடுத்தி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.
மேலும் அரசு திட்டங்கள் மக்கள் நலனுக்கா அல்லது நிர்வாக அலட்சியத்திற்கா?
மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்கள் நலனுக்காக அறிவிக்கும் திட்டங்கள் நடைமுறையில் அதிகாரிகள் அலட்சியம், தவறான திட்டமிடல் மற்றும் ஒப்பந்ததாரர் இன் தாமதம் காரணமாக பாதிக்கப்படுகின்றனவா என்ற குற்றச்சாட்டு இங்கு மீண்டும் எழுந்துள்ளது.
கீழக்கரையில் அரசு தாலுகா மருத்துவமனை புதிய கட்டிடப் பணிகளை விரைந்து முடிக்கவும், பொறுப்பற்ற அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், அரசு திட்டங்கள் உண்மையில் மக்களின் பயன்பாட்டிற்கு வர வேண்டும் என்று கீழக்கரை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக நிலவி வருகிறது .










You must be logged in to post a comment.