சேதுபதி மன்னர்கள் காலம் தொட்டு புகழ்பெற்று விளங்கி வரும் ராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி இன்று நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி அம்மனுக்கும் சொக்கநாதர் பெருமானுக்கும் இடையேயான திருக்கல்யாணம் இன்று கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க முதலில் மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருக்கல்யாண நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருக்கல்யாண நிகழ்வுக்குப் பின்னர் பெண்கள் தங்களது திருமாங்கல்ய கயிறுகளை மாற்றிக் கொண்டனர். பக்தர்களுக்கு திருமாங்கல்ய கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது.
மேலும், விழாவையொட்டி பக்தர்களுக்கான அன்னதானமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோவில் முழுவதும் ஆன்மிக உற்சாகம் நிலவிய நிலையில், பக்தர்கள் திரளான பங்கேற்பு விழாவிற்கு சிறப்பூட்டியது.




You must be logged in to post a comment.