ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா பகுதியில், திருவாடானையிலிருந்து திருவொற்றியூர் செல்லும் சாலையில் கள்ளிக்குடி பிரிவு அருகே சாலை நடுவே அமைந்துள்ள குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள பெரிய உடைப்பு பல மாதங்களாக சரிசெய்யப்படாமல் உள்ளது. இதனால், குடிநீர் விநியோக நேரங்களில் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடி வீணாகி வருகிறது.
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இத்தகைய சூழலில், அத்தியாவசிய குடிநீர் இவ்வாறு வீணாகும் சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அப்பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும், இதுவரை எந்தவித சீரமைப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதனால் அதிகாரிகளின் அலட்சியப்போக்கு வெளிப்படையாகப் பிரதிபலிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
“ஒரு புறம் மக்கள் குடிநீருக்காக தவிக்கின்றனர்; மறுபுறம் அதிகாரிகளின் கவனக்குறைவால் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகிறது. இது மிகவும் வேதனையளிக்கும் நிலை,” என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம், குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு
உடைந்த குடிநீர் குழாயை அவசரமாக சீரமைக்கவும் , குடிநீர் வீணாவதை நிரந்தரமாக தடுக்கவும் , அலட்சியம் காட்டிய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
“குடிநீர் பாதுகாப்பு என்பது பொதுநலப் பொறுப்பு; அலட்சியம் காட்டும் நிர்வாகம் மக்கள் நலனுக்கு எதிரானது” என்ற கருத்து அப்பகுதியில் வலுவடைந்துள்ளது.




You must be logged in to post a comment.