திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பாலசமுத்திரம் சாலையில் வரட்டாற்று பாலம் பகுதியில் மர்ம நபர்கள் ஒருவர் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று அதிகாலை வயல் காட்டிற்குச் சென்ற பொதுமக்கள், ரத்த வெள்ளத்தில் ஒருவர் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அருகில் சென்று பார்த்தபோது, அந்த நபர் பலத்த காயங்களுடன் உயிர் போராட்டத்தில் இருந்தது தெரியவந்தது. தாகத்தால் தவித்த அவர், அங்கிருந்தவர்களிடம் “குடிக்கத் தண்ணீர்” கேட்டதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்தாலும், ஆம்புலன்ஸ் வருவதற்குள் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த பழனி தாலுகா போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்த போயன் மகன் முருகன் (44) என்பது தெரியவந்தது. அவரை மர்ம நபர்கள் கட்டையால் தலை மற்றும் உடல் பகுதிகளில் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
முருகன் பழனிக்கு வந்ததற்கான காரணம் என்ன? அவர் மேற்கொண்டிருந்த தொழில் என்ன? முன்விரோதம் காரணமா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.




You must be logged in to post a comment.