23 April 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை 21வது வார்டில் “சாலை நாடகம்” – மக்கள் அவதி .! நகராட்சி அலட்சியம்?

கீழக்கரை 21வது வார்டில் “சாலை நாடகம்” – மக்கள் அவதி .! நகராட்சி அலட்சியம்?

எழுதியவர்: Baker BAker April 22, 2026, 2:42 pm

நன்றாக இருந்த பேவர் பிளாக் கற்கள் உடைத்து சாலையில் குவிப்பு – தேர்தல் நேர அவசர பணிகள் மீது முறைகேடு நடைபெறுவதாக சந்தேகம்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட 21வது வார்டு பெரியகாட்டு பகுதியில் நடைபெற்று வரும் சாலை பணிகள் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்தும் சேதமின்றி இருந்த பேவர் பிளாக் சாலையை, எந்தத் தேவையும் இல்லாமல் உடைத்து அகற்றியதுடன், மணலை சாலையின் நடுப்பகுதியில் கொட்டி, அதே கற்களை அங்கேயே குவித்து வைத்திருப்பது கடுமையான நிர்வாக அலட்சியமாகவே பார்க்கப்படுகிறது.

இந்த செயல்பாட்டினால் அப்பகுதிக்கு செல்லக்கூடிய இருசக்கர வாகனங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் தினசரி சிரமங்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக பள்ளி மாணவர்கள், முதியவர்கள் மற்றும் அவசர சேவைகளை பயன்படுத்தும் மக்கள் கூட இந்த சாலையை கடக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இது ஒரு திட்டமிட்ட பணியா அல்லது திட்டமிடாத அலட்சியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும், தேர்தல் நேரங்களில் புதிய பணிகள் தொடங்கக் கூடாது என்ற விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், இவ்வாறு அவசர அவசரமாக சாலை பணிகள் மேற்கொள்ளப்படுவது சந்தேகத்திற்கிடமானதாகும்.

 “ஏற்கனவே இருந்த சாலையை உடைத்து மீண்டும் அமைப்பதற்கான அவசரம் என்ன?” என்ற கேள்வியை பொதுமக்கள் நேரடியாக எழுப்பி வருகின்றனர்.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வீட்டுக்கு வீடு குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றபோது, அதற்காக பேவர் பிளாக் கற்கள் அகற்றப்பட்டு பின்னர் மீண்டும் அமைக்கப்பட்டன. அப்போதே சாலை முழுமையாக சீரமைக்கப்படாமல், தற்போது மீண்டும் அதே சாலையை உடைத்து பணிகள் மேற்கொள்ளப்படுவது தேவையற்ற செலவினமாக மட்டுமல்லாமல், “கணக்கு காட்டும் வேலை” என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், கீழக்கரை நகராட்சியில் ஒப்பந்தப் பணிகள் வழங்கப்படும் போது, முறையான தகுதி மற்றும் அனுபவம் கொண்ட ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது. ஒப்பந்ததாரர்கள் மூலம் நடைபெறும் பணிகளில் தரமின்மை, காலதாமதம் மற்றும் முறைகேடுகள் அதிகரித்துள்ளன என்றாலும், நகராட்சி நிர்வாகம் இதை கண்டுகொள்ளாதது ஏன் என்ற கேள்வி தீவிரமாக எழுந்துள்ளது.

“பொதுமக்களின் வரிப்பணத்தில் நடைபெறும் பணிகள் இவ்வாறு வீணாக செலவிடப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது. சாலைகளை உடைத்து மீண்டும் அமைப்பது என்ற பெயரில் திட்டமிட்ட முறைகேடுகள் நடைபெறுகிறதா?” என்ற சந்தேகத்தையும் சமூக ஆர்வலர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும், மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இந்த விவகாரத்தில் உடனடி விசாரணை மேற்கொண்டு,  அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களின் அடிப்படை தேவைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படாத நிலையில், தேவையற்ற பணிகளுக்கு முன்னுரிமை வழங்கும் நகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!