தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தென்காசி மாவட்டத்தில் அதிமுக-பாஜக கூட்டணி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், “அதிமுகவை புறக்கணிப்போம்” என ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையாலுருட்டி, திரிகூடபதி உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டியில், பொன் மனச்செம்மல் எம்.ஜி.ஆர் ஆட்சியில் நாடார் சமுதாயத்திற்கு 40 MLA சீட். 2026 தேர்தலில் வெறும் 4 சீட் மட்டுமா? நாடார் சமுதாயத்தை புறக்கணிக்கும் அ.தி.மு.க வை புறக்கணிப்போம்! என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது. தென்காசி மாவட்ட நாடார் எழுச்சி பேரவை சார்பில் இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
மேலும், நேற்றைய தினம் தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதியில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கச் சென்ற அதிமுக ஒன்றிய செயலாளர் மீது, சொந்தக் கட்சியினரே முட்டை வீசி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக அதிமுக ஒன்றிய செயலாளர் வாக்கு சேகரிக்க வீரிருப்பு கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது, உள்ளூர் அதிமுக நிர்வாகிகள், கட்சியில் தங்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்றும், பாஜகவிற்கு ஏன் வாக்கு சேகரிக்கிறீர்கள் என்றும் எதிர்ப்பு தெரிவித்து அதிமுக நிர்வாகிகள் ஒன்றிய செயலாளரின் கார் மீது முட்டைகளை வீசினர். இந்த சம்பவம் வாசுதேவநல்லூர் தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.