18 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பிரதமர் வீட்டு வசதி திட்டம்: தமிழ்நாடு அரசு நிதி 61% ; ஒன்றிய அரசு நிதி 39% -கனிமொழி எம்பி பேச்சு..

பிரதமர் வீட்டு வசதி திட்டம்: தமிழ்நாடு அரசு நிதி 61% ; ஒன்றிய அரசு நிதி 39% -கனிமொழி எம்பி பேச்சு..

எழுதியவர்: Abubakker Sithik April 11, 2026, 11:18 pm

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கிட்டத்தட்ட 61 சதவீத நிதியை வழங்குகிறது; ஒன்றிய பாஜக அரசு 39 சதவீதம் மட்டுமே நிதி வழங்குகிறது என வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பரப்புரையில் கனிமொழி எம்.பி பேசினார்.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ராஜாவை ஆதரித்து, வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட T. ராமநாதபுரம், புளியங்குடி – காமராஜர் சிலை, அருணாச்சலபுரம் – கிருஷ்ணன் கோவில் பின்புறம் ஆகிய பகுதிகளில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு, பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி எம்.பி.; தமிழ்நாடு முதலமைச்சர் தேர்ந்தெடுத்து, வாசுதேவநல்லூர் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராஜா. உங்கள் வீட்டு வேட்பாளர். அவருக்கு உங்கள் பொன்னான வாக்குகளை வழங்கி வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம் என்ற நம்பிக்கையுடன், உங்களிடம் மீண்டும் வாக்கு கேட்க வந்திருக்கிறோம். உரிமையோடு வாக்கு கேட்க வந்திருக்கிறோம்.

கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவது ஆகட்டும், லேப்டாப் வழங்குவது ஆகட்டும், ‘வீடு தேடி கல்வி’ திட்டம் ஆகட்டும், ‘தாயுமானவர்’ திட்டம் ஆகட்டும், இத்தகைய அனைத்து திட்டங்களையும் செயல்படுத்திய உரிமையுடன், உங்களிடம் வாக்கு கேட்கிறோம். எதிர் அணியில் இருப்பவர்கள் தமிழ்நாட்டிற்கு எந்தத் திட்டத்தையும் கொண்டு வந்ததில்லை. நமக்கான நிதியை அள்ளிக் கொண்டு செல்கிறார்களே தவிர, கிள்ளிக் கூட வழங்குவதில்லை.

பிரதமரின் வீட்டு வசதி திட்டம். அதற்கும் நமக்கு எளிதில் புரியாத பெயரையே வைக்கிறார்கள். “பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா” என்ற ஒரு திட்டம். உங்களுக்கு புரிகிறதா? பெரும்பாலோருக்கு புரியாது. புரியாத பெயரையே வைப்பார்கள். அந்தத் திட்டத்தின் பெயரே பிரதம மந்திரி திட்டம். ஆனால் அதற்கான நிதியை யார் வழங்குகிறார்கள்? முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்திற்கு, தமிழ்நாடு அரசு கிட்டத்தட்ட 61 சதவீதம் நிதி வழங்குகிறது. ஒன்றிய பாஜக அரசு வழங்குவது 39 சதவீதம் மட்டுமே. உண்மையில் பார்த்தால், அதை ‘முதல்வர் திட்டம்’ என்றே சொல்ல வேண்டும். ஆனால் அவர்கள் தங்களுடைய ஸ்டிக்கரை கொண்டு வந்து, நம்மால் 61 சதவீதம் நிதி வழங்கப்படும் திட்டத்தில் ஒட்டி செல்கிறார்கள். இதுவே பாஜக என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வேலை தேடும் இளைஞர்களுக்கு உரிய பயிற்சியையும் வழங்கி, உதவித் தொகையும் வழங்க இருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர். தமிழ்நாட்டு இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு லேப்டாப்களும் வழங்கப்பட இருக்கின்றன. இந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரி மாணவர், ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெறுகிறேன் என்று தெரிவித்ததை பார்த்து, “நீங்கள் ‘நான் முதல்வன்’ திட்டத்தையும் பயன்படுத்தி உயர வேண்டும்.

வாசுதேவநல்லூர் தொகுதியில் தி.மு.க அரசு செய்த வளர்ச்சிப் பணிகள்: வாசுதேவநல்லூர் பேருந்து நிலையம் சீரமைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு உள்ளது. புளியங்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு பெற்றுத் தரப்பட்டுள்ளது. புளியங்குடியில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. சிவகிரி அரசு மருத்துவமனையில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. நெற்கட்டும் செவல் சுதந்திர போராட்ட வீரர் வெண்ணிகாலாடி அவர்களுக்கு திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு உள்ளது. ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையுடன் ஒத்துப் போகும் திருமலாபுரத்தில் முதல்கட்ட அகழாய்வு பணிகள் நடத்தப்பட்டுள்ளது.

வாசுதேவநல்லூர் தொகுதிக்கான தேர்தல் வாக்குறுதிகள்: வாசுதேவ நல்லூரில் உழவர் சந்தைகள் இல்லாத ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் புதிய உழவர் சந்தைகள் நிறுவப்படும். உணவு சார்ந்த புத்தொழில்களை தொடங்க இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஊக்குவிக்கப்படுவார்கள். அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வசதி உறுதி செய்யப்படும். தளவாய்புரம் பகுதியில் நிலவும் குறைந்த மின் அழுத்தப் பிரச்சினை சீராக்கப்படும். புளியங்குடி அரசு மருத்துவமனையின் வசதிகள் மேம்படுத்தப்படும். தென்காசியில் வேளாண் தொழில் பூங்கா அமைக்கப்படும்.

பல்வேறு திட்டங்களை செய்த செயல்படுத்த இருக்கின்ற திராவிட மாடல் ஆட்சியை கொண்டுவர முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் கரத்தை வலுப்படுத்த உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என உங்களை கேட்டுக் கொள்கிறேன் என்று பேசினார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!