27 June 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » ஜனநாயகத் திருவிழா -2026

ஜனநாயகத் திருவிழா -2026

எழுதியவர்: Askar February 23, 2026, 10:08 am

ஜனநாயகத் திருவிழா -2026

( தோரணம் -14 )

அதிகார வர்க்கத்தின் “2G-அட்ராசிட்டீ” கதைகள்

கரூர் மாநகரத்தை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலை. அங்கு 2-ஆயிரம் சதுர அடியில் ஒரு மனை. நினைத்த மாத்திரத்தில் நம்மை இணைத்துக் கொள்ளும் சாலைப் போக்குவரத்து மற்றும் சரக்குப் போக்குவரத்து வசதிகள். வரக் காத்திருக்கும் மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு. உறிஞ்சிக் கொள்ள போதுமான நிலத்தடி நீர். அடுத்த ஆறு மாதத்தில் வீடோ, கடையோ, கம்பெனியோ கூட – கட்டி முடித்து குடி புகும் அளவுக்கு நல்ல ஜன நடமாட்டம் உள்ள புதிய புறநகர் பகுதி. இப்படி பல்வேறு சாமுத்ரிகா லட்சணங்கள் நிரம்பிய இந்த மனையின் இன்றைய சந்தை மதிப்பு சுமார் 1- கோடி சொல்கிறார்கள்.

அப்படியே… “கட்”- செய்தால்.

அதே தேசிய நெடுஞ்சாலையை அடுத்த மாநில நெடுஞ்சாலை, அப்படியே உள்ளோடி வந்து, மாவட்ட நெடுஞ்சாலையைக் கடந்து ஊரகச் சாலையின் சிறு கிராமத்தை அடுத்த பகுதி. அங்கு, அதே 2-ஆயிரம் சதுர அடி கொண்ட காலி மனை. சந்தை மதிப்பு சுமார் 2.5 கோடி சொல்கிறார்கள்.

இந்த இரு மனைகளுக்கும் ஒரே “லேன்ட் புரமோட்டர்”- தான். ஆனால், விலை மட்டும் இப்படி வித்தியாசமாக சொல்கிறார்கள்.

அது எப்படி சார்? முன்னே சொன்னது நேஷ்னல் ஹைவே. அதற்க்கு அந்த விலை சரிதான். ஆனால், இது உள்ளோடி கிராமத்து சாலையோர மனை. அதை விட இதற்கு 2.5 மடங்கு அதிகமான விலை சொன்னால் எப்படி ? அந்த கரூர் அவுட்டர் நில மதிப்பை ஒப்பீட்டு அளவில் வைத்துப் பார்த்தால், இந்த கிராமத்து மனை 25 லட்சம் கூடத் தாண்டாது. அப்படி இருக்க…. ஒரு பத்து மடங்கு விலை வைத்துச் சொன்னால் யார் சார் வாங்குவார்கள். அப்படி வாங்கிறதை விடுங்க. இப்படி எல்லாம் சம்பந்தமே இல்லாமல் குத்து மதிப்பாக விலை சொன்னால் அதை யார் சார் நம்புவார்கள்? அந்த நிலத்திற்க்கும், இந்த நிலத்திற்க்குமான “ரியல் கெப்பாசிட்டீ”- ஏணி வைத்தால் கூட எட்டாதே சார் ? ஆனால், அப்படி எட்டாத பூமிக்கு நீங்கள் ஏகப்பட்ட விலை அல்லவா சொல்கிறீர்களே ? இது எப்படி ஓடி அடையும்?

ஆனால் பாருங்கள் நண்பர்களே! அப்படி குத்து மதிப்பாக சொன்ன ஒரு விலையை மக்கள் நம்பினார்கள்! அந்த அகாலமான விலையைப் பற்றி ஊர் முழுக்க பேசினார்கள் ! அதுவும் அந்த 2.5 மடங்கு அதிகமான விலையைப் பற்றி தங்களுக்குள் மீண்டும், மீண்டும் பேசிப் பரவசம் அடைந்தார்கள் ! ஆனால், இப்படி எல்லாம் ஒப்பிட்டுப் பேசி கேள்வி கேட்கவில்லை.

அப்படியே மீண்டும் ஒரு முறை “கட்”- செய்து, அந்த 2G மற்றும் 3G அலைக்கற்றை விவகாரத்திற்க்கு வாருங்கள்.

அங்கு…..!!!

பேச்சு ஒலி அடங்கிய சிக்னல், நிலையான படங்கள், ஓடும் காணொளிகள், ஒலித் தொகுப்புகள் எல்லாம் அடங்கிய WiMax என்ற தனிச் சிறப்பான சிக்னல்கள், குறைந்த வேகம் கொண்ட அலைவரி என பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய 3G மின்காந்த அலைக் கற்றையை 65- ஆயிரம் கோடிக்கு இந்திய தொலை தொடர்புத் துறை 2010- ஆம் ஆண்டு ஏலம் விடப்பட்டது. இந்த 3G அலைக்கற்றையை கரூர் ஹைவேஸ் ரோடு காலி மனை என நினைவில் வைத்துக் கொள்க.

இப்போது நம்ம 2G-க்கு வருவோம். இந்த 2G என்பது அலைபேசியில் நாம் பேசக்கூடிய பேச்சு ஒலிகள் அடங்கிய சிக்னல்களை மட்டுமே சுமந்து செல்லும் மின்காந்த இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை. ஆனால், இந்த அலைக் கற்றையின் சந்தை மதிப்பு சுமார் 1 லட்சத்து 74 ஆயிரம் கோடிகள் என ஒரு குத்து மதிப்பாகச் சொன்னார்கள்.

அப்படிச் சொன்னது யாரூ?

இந்திய ஒன்றிய அரசின் மைய கணக்கு தணிக்கை குழுவின் ( CAG) தலைவர் திரு.வினோத் ராய் அவர்கள். அது சரி. அத்தனை உயரத்தில் இருந்து சத்தம் போட்டு கூவும் போது அதனை நம்பாமல் இருக்க முடியுமா என்ன ? எனவே, அதை நாம் முழுமையாக நம்பினோம்.

அப்போதைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தொலை தொடர்பு கேபினட் அமைச்சராக இருந்த தி.மு.க.- வின் ஆ.ராசா MP அவர்கள் 2008 ஆம் ஆண்டு 2G அலைக்கற்றையை வெறும் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏலம் விட்டு விட்டார். ஆனால் அதன் சந்தை மதிப்பு மிக, மிக அதிகம். இதனால் இந்திய அரசுக்கு 1 லட்சத்து 74 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு இருக்க”லாம்”- என அந்த CAG அறிக்கை கூறியது.

இந்த அறிக்கையை செய்தியாக மாற்றிய இந்திய ஊடகங்கள் குறிப்பாக வட இந்திய ஊடகங்கள் தி.மு.க. அமைச்சர் 1லட்சத்து 74 ஆயிரம் கோடி பணத்தை சுருட்டிக் கொண்டு போய் விட்டார். ஊழல் செய்து விட்டார் எனப் பெரும் குரலெடுத்து அலறத் தொடங்கியது.

கதை எப்படி போகுது பாத்தீங்களா?

புதிய தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட பல்நோக்கு மூன்றாம் தலைமுறை அலைக் கற்றையான 3G அலைக்கற்றையை விட, அதற்கு முந்தைய தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்ட இந்த இரண்டாம் தலைமுறை அலைக் கற்றை, அதிலும் ஒற்றை நோக்கு தன்மை கொண்ட 2G அலைக்கற்றை விலை அதிகம். அதிலும் 2.5 மடங்கு அதிகம் என கச்சை கட்டிக் கொண்டு குதிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அன்றைய அதிகார வர்க்கமும், கார்ப்பரேட் ஊடகங்களும் தங்களின் சொந்த ஆதாயத்திற்காக, நல்ல நிலையில் உள்ள சவாரிக் குதிரையை கழுதை என்றார்கள். வெறும் சுமை மட்டுமே சுமக்கும் கழுதையை குதிரை என்றார்கள்.

இந்த கூட்டுக் களவாணிகளின் “அட்ராசிட்டீ”- யை தட்டிக் கேட்க யாருமில்லை. எனவே, பொருத்தமே இல்லாத பொய் குற்றச்சாட்டு ஒன்று விஸ்வரூபம் எடுத்து இந்த தேசத்தையே சுற்றி வளைத்துக் கொண்டது. ஆனால், அதுவொரு வலிமையற்ற கரும் புகை தான் எனத் தெரிந்தும் கூட, அந்தக் கரும் புகையை விரட்டியடிக்க யாரும் விரும்பவில்லை.

இதனால் இந்திய அரசியல் அரங்கில் மிகப் பெரிய சர்ச்சைகள் வெடித்தது. இந்த சூழலில், எது நியாயம் ? என உரசிப் பார்த்து உண்மையை உரைக்க வேண்டிய ஊடகங்கள் என்ன செய்தன ? அரசியல் கட்சிகள் என்ன செய்தன ? நாம் என்ன செய்தோம் ?

இதற்கான விடைகளுடன்….

ஷரீப். அஸ்கர் அலி, வண்ணப்பலகை

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!