27 June 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » பல்வேறு நிபந்தனைகளுடன் வேலூரில் விஜய்..

பல்வேறு நிபந்தனைகளுடன் வேலூரில் விஜய்..

எழுதியவர்: Askar February 23, 2026, 10:00 am

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம், நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் உள்ளிட்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றன. 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு முதன்முறையாக தேர்தலை சந்திக்கவிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படும் நிலையில், அக்கட்சி தேர்தல் பணிகளில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அந்தவகையில், இன்று வேலூர் மாவட்டம் அகரம் சேரியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெறவுள்ளது.

நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் கலந்துகொள்ள 4,900 பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணிப்பெண்கள் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கூட்டத்திற்காக வேலூர் முள்ளிக்கொண்டா அடுத்த அகரம் சேரியில் 33 ஏக்கரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து, நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறும் இடத்தில் 4,900 நாற்காளிகள் போடப்பட்டுள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் நாற்காளி போட்டு நடைபெறும் முதல் திறந்தவெளி மக்கள் சந்திப்பாக வேலூர் மாவட்ட சந்திப்பே இருக்கிறது.

மேலும், 600 அடி நீளம், 140 அடி அகலத்தில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு, கோடை வெயிலைச் சமாளிக்க நவீன ஏர்-கூலர்கள் பொருத்தப்பட்டுள்ளன. பிற்பகல் 12 மணி முதல் 4 மணிக்குள் நிர்வாகிகள் மத்தியில் விஜய் உரையாற்ற உள்ளார். இதற்காகப் பந்தலுக்குள் நிறுத்தப்பட்டுள்ள பேருந்தின் மேல் தளத்தில் இருந்து அவர் பேசவுள்ளார். பாதுகாப்புப் பணியில் 900 காவலர்கள் ஈடுபட உள்ள நிலையில், 25 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழுவும், 10 ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் உள்ளன. கியூ-ஆர் கோட் அனுமதி சீட்டு வைத்திருப்போருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தவெக தலைமை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

முன்னதாக, கரூர் உயிரிழப்புச் சம்பவத்துக்குப் பிறகு 2 மாதங்களுக்கு மேலாக எந்தவித பொதுக்கூட்டங்களையும் நடத்தாமல் இருந்து வந்த தவெக தற்போது காவல்துறையின் கட்டுப்பாடுகளுடன் மக்கள் சந்திப்பு நிகழ்வுகளை நடத்தி வருகிறது. கடைசியாக, சேலம் மாவட்டம் சீலநாயக்கன் பட்டியில் பிப்ரவரி 13 ஆம் தேதி தவெக-வின் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் வெயில் காரணமாக வலிப்பு ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்திருந்தார். இந்த சூழலில் தான், இந்த மாநாட்டில், பந்தல் அமைப்பது மற்றும் நாற்காளிகள் போடுவது போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!