27 June 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » அரிய வகை கடமானை வேட்டையாடி கறிக்கு பயன்படுத்திய நபர் கைது;தென்காசியில் பரபரப்பு!

அரிய வகை கடமானை வேட்டையாடி கறிக்கு பயன்படுத்திய நபர் கைது;தென்காசியில் பரபரப்பு!

எழுதியவர்: Askar February 20, 2026, 7:20 pm

அரிய வகை கடமானை வேட்டையாடி கறிக்கு பயன்படுத்திய நபர் கைது; தென்காசியில் பரபரப்பு!

தென்காசி மாவட்டத்தில் மனிதர்கள் எளிதில் நுழைய முடியாத வனப்பகுதிக்குள் சட்டவிரோதமாக அத்துமீறி நுழைந்து, அரிய வகை கடமானை வேட்டையாடி கறிக்காக பயன்படுத்த முயன்ற நபரை வனத்துறையினர் சுற்றிவளைத்து கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட மேக்கரை பீட் எல்லைக்குட்பட்ட அடவிநயினார் அணைக்கட்டு பகுதி கடந்த சில நாட்களாக கடமான்களின் நடமாட்டத்தால் உயிர்ப்புடன் காணப்பட்டது. தண்ணீர் தேடி கூட்டம் கூட்டமாக வந்துச் சென்ற கடமான்கள், கடந்த இரு நாட்களாக திடீரென காணாமல் போனது வனத்துறையினருக்கும், உள்ளூர் மக்களுக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

“மான்களை யாரோ அச்சுறுத்தி வனப்பகுதிக்குள் விரட்டி அடித்திருக்கலாம்” என்ற தகவல் பரவிய நிலையில், உள்ளூர் விசாரணையில் அதிர்ச்சி தரும் தகவல் வனத்துறையினருக்கு கிடைத்தது. இதே பகுதியைச் சேர்ந்த சாமி என்பவர், கடமான்களை சட்டவிரோதமாக வேட்டையாடி கறிக்காக பயன்படுத்தி வருவதாக தகவல் உறுதியாகியது.

இதையடுத்து வனத்துறையினர் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அடவிநயினார் டேம் அணைக்கட்டு மேல் பகுதியில், கடமானை சுட்டு வேட்டையாடி கறிக்காக துண்டு போட்டுக் கொண்டிருந்த சாமியை வனத்துறையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

அப்போது அவர் மான்களின் கால்களை நெருப்பில் வாட்டி சூப் வைக்க தயாராகிக் கொண்டிருந்த நிலையில் சிக்கியது வனத்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கைது செய்யப்பட்ட சாமியை வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று பலத்த பாதுகாப்புடன் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், அவர் அடிக்கடி காட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, நெருப்பை மூட்டி வனவிலங்குகளை அச்சுறுத்தி வேட்டையாடி வந்ததும், மானின் வேகத்தை ஈடுகட்ட ஈட்டியை வீசி வேட்டையாடும் யுக்தியை பயன்படுத்தியதும் தெரியவந்தது. இந்த சட்டவிரோத செயல்களில் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்ததும் அம்பலமானது.

இதனைத் தொடர்ந்து சாமி மீது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவருடன் தொடர்பில் இருந்த கூட்டாளிகள், மேலும் காசு கொடுத்து மான் கறி வாங்கியவர்கள் யார்? என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், அவரிடமிருந்து நெருப்பில் வாட்டிய மானின் கால்கள், வேட்டைக்கு பயன்படுத்திய அரிவாள், மானின் எலும்புக் கூடுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!