1964-க்குப் பிறகு எங்கள் கிராமத்திற்கு வந்த முதல் ஆட்சியர் நீங்கள்தான்! – கண்ணீருடன் கிராம மக்கள் வரவேற்பு!
பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகளின்றித் தவிக்கும் பாண்டமங்கலம் கிராமம் – மின்சாரம், சாலை, குடிநீர், சுகாதாரம், மருத்துவ வசதிகள் கோரி ஆட்சியரிடம் வேதனைக் குமுறல்; உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு!
ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாண்டமங்கலம் கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா. சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று கிராம மக்களைச் சந்தித்து, அவர்களின் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.
அப்போது கிராம மக்கள், “1964-ஆம் ஆண்டுக்குப் பிறகு எங்கள் கிராமத்திற்கு நேரில் வந்துள்ள முதல் மாவட்ட ஆட்சியர் நீங்கள்தான்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
மேலும், பல ஆண்டுகளாகத் தங்களது கிராமத்தில் மின்சாரம், சாலை, குடிநீர், சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய அடிப்படை வசதிகள் முறையாகக் கிடைக்காமல் மக்கள் கடும் சிரமங்களைச் சந்தித்து வருவதாகவும், இது தொடர்பாகப் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் வேதனையுடன் மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துரைத்தனர்.
கிராம மக்களின் குறைகளையும், நீண்டகால கோரிக்கைகளையும் பொறுமையாகக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர், அவற்றை விரைந்து நிவர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக உத்தரவிட்டார்.
மேலும், கிராமத்திற்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் விரைவில் ஏற்படுத்தித் தர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கிராம மக்களிடம் உறுதியளித்தார்.
இதனால் மகிழ்ச்சியடைந்த கிராம மக்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் சிவகுரு பிரபாகரனை பாரம்பரிய முறைப்படி குலவையிட்டு வரவேற்றனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது கிராமத்தின் குறைகளைக் கேட்க மாவட்ட ஆட்சியர் நேரில் வந்ததைக் கண்டு நெகிழ்ச்சியடைந்த மக்கள், கண்ணீர் மல்க நன்றிகளைத் தெரிவித்தனர்.
இந்நிகழ்வின்போது கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீ நிகம், ராமநாதபுரம் வட்டாட்சியர் பழனிகுமார் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
பல ஆண்டுகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? ஆட்சியர் அளித்த உறுதிமொழியின் படி பாண்டமங்கலம் கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் விரைவில் கிடைக்குமா? என்பதே தற்போது கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.




You must be logged in to post a comment.