24 November 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » திருப்பரங்குன்றத்தில் வழக்கம்போல் தீபம்; உச்சித் தூணில் தீபம் இல்லை – இந்து அமைப்பினர் போராட்டம்: தள்ளு முள்ளு பதட்டம்!

திருப்பரங்குன்றத்தில் வழக்கம்போல் தீபம்; உச்சித் தூணில் தீபம் இல்லை – இந்து அமைப்பினர் போராட்டம்: தள்ளு முள்ளு பதட்டம்!

எழுதியவர்: Askar November 24, 2026, 7:33 pm

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்தின் போது, மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் தீபம் ஏற்றுவது வழக்கம். ஆனால், கடந்த 2025-ம் ஆண்டு மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என இந்து அமைப்புகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், அதற்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அப்போதைய திமுக அரசில், புதிய நடைமுறையில் தீபம் ஏற்றினால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது எனக் கோரி காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து, கடந்த ஆண்டு பழைய நடைமுறையிலேயே தீபம் ஏற்றப்பட்டிருந்தது.

இந்தச்சூழலில் தான், இந்த ஆண்டு உச்சநீதிமன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கியிருந்தது. எனினும், தமிழக அரசு மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த போதிலும் அது அவசர விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. எனினும், வழக்கமான இடத்திலேயே தீபம் ஏற்ற வேண்டும் என்பதில் தமிழக முதல்வரும் அரசும் உறுதியாக இருப்பதாக தவெக கூட்டணிக் கட்சியான விசிகவின் தலைவர் திருமாவளவன் நேற்றுத் தெரிவித்திருந்தார்.

இந்தச்சூழலில் தான், கார்த்திகை தீபமான இன்றைய தினம் திருப்பரங்குன்றத்தில் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர். தொடர்ந்து, திருப்பரங்குன்றத்திற்கு செல்லும் பாஜக தலைவர் தடுத்து நிறுத்தப்பட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டிருந்தனர். இதனால், வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்படுமா? அல்லது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக அரசு நிறைவேற்றும் நோக்கில், மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்து வந்தது.

இந்நிலையில் தான், தற்போது திருப்பரங்குன்றத்தில் வழக்கம்போல் உச்சி பிள்ளையார் கோவில் மண்டத்தில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது. மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.

இதையடுத்து, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படாததைத் தொடர்ந்து, அங்கு திரண்டுள்ள போராட்டக்காரர்கள் மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இதற்கிடையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!