வீடு வீடாகச் சென்று கொசுப்புழு ஒழிப்பு; புகை மருந்து தெளிப்பு, நிலவேம்புக் குடிநீர் வழங்கவும் திட்டம்!
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சிப் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், நகராட்சி நிர்வாகம் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, டெங்கு கொசு ஒழிப்புப் பணியாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நகர்மன்றத் தலைவர் தலைமையில், நகராட்சி ஆணையாளர் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், வீடு வீடாகச் சென்று கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து அழித்தல், வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றுதல், பொதுமக்களிடம் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளைத் தீவிரமாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
மேலும், நகராட்சியின் அனைத்துப் பகுதிகளிலும் சுழற்சி முறையில் கொசு ஒழிப்புப் புகை மருந்து தெளித்தல், நிலவேம்புக் குடிநீர் வழங்குதல், தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து சுற்றுப்புறங்களைத் தூய்மைப்படுத்துதல் மற்றும் தேவையான இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்துதல் போன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
**டெங்குவை ஒழிப்பதில் நகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம்!** எனவே, வீடுகள், மொட்டை மாடிகள், காலி இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பராமரித்து, டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு நகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.




You must be logged in to post a comment.