20 November 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கொடைக்கானல் மலைப்பாதையில் பயங்கர விபத்து:-400 அடி பள்ளத்தில் வேன் பாய்ந்து 3 பேர் பலி:16 பேர் படுகாயங்களுடன் மீட்பு..

கொடைக்கானல் மலைப்பாதையில் பயங்கர விபத்து:-400 அடி பள்ளத்தில் வேன் பாய்ந்து 3 பேர் பலி:16 பேர் படுகாயங்களுடன் மீட்பு..

எழுதியவர்: Askar November 20, 2026, 10:42 am

கொடைக்கானல் மலைப்பாதையில் பயங்கர விபத்து:-400 அடி பள்ளத்தில் வேன் பாய்ந்து 3 பேர் பலி:16 பேர் படுகாயங்களுடன் மீட்பு..

பழனி, கொடைக்கானல் மலைப்பாதையில் 400 அடி பள்ளத்தில் வேன் பாய்ந்து 3 பேர் பலியாகினர். 16 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பழனி மதினாநகர் பகுதியை சேர்ந்தவர் முஜிப் ரகுமான் (வயது 55), பூ வியாபாரி. இவரது உறவினர் ஒருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கொடைக்கானலில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக முஜிப் ரகுமான் தனது உறவினர்களுடன் வேனில் கொடைக்கானல் சென்றார். நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் வேனில் பழனிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

இரவு 7 மணி அளவில் கொடைக்கானல்-பழனி மலைப்பாதையில் சவரிக்காடு அருகே வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் இருந்த சுமார் 400 அடி பள்ளத்தில் பாய்ந்தது.

இதில் வேனில் பயணம் செய்த 19 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர். இதைக்கண்ட அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கொடைக்கானல் போலீசார் மற்றும் கொடைக்கானல், பழனியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் துரிதமாக ஈடுபட்டனர்.

இதில் அங்கு வேனின் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த பழனி மதினா நகரை சேர்ந்த நிஜாமுதீன் (வயது 60), பழனியை சேர்ந்த சேக்பரீத் (27), அப்பாஸ் (65) ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என தெரிய வந்தது. அவர்களது உடல்களை போலீசார் மீட்டனர்.

மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த முஜிப் ரகுமான், அவரது உறவினர்கள் அனீஸ் பாத்திமா (23), அம்ஜித்கான் (29), அசாருதீன் (28), சகிலா (45), யூசுப் (13), சபீனா (42) மற்றும் உடுமலையை சேர்ந்த சாஜித்மீரான் (25) உள்ளிட்ட 16 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உறவினர்கள் கலக்கம் இதில் அனீஸ் பாத்திமா மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் முஜிப் ரகுமானின் உறவினர்கள் பழனி அரசு ஆஸ்பத்திரியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே பழனி ஆர்.டி.ஓ. பிரியங்கா, தாசில்தார் சஞ்சய்காந்தி ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு நேரில் வந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். கொடைக்கானல் மலைப்பாதையில் நடந்த இந்த பயங்கர விபத்து கொடைக்கானல் மற்றும் பழனி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!