அரிசி, பருப்பு, பால் என அடுத்தடுத்து விலை உயர்வு – வருமானம் உயராமல் வாழ்க்கைச் செலவு மட்டும் உயர்வதால் கூலித் தொழிலாளர்கள் தவிப்பு; விலைவாசியைக் கட்டுப்படுத்த தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பத்தினர் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர்.
குறிப்பாக, கிலோ ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்ட பூண்டு தற்போது ரூ.400 ஆகவும், ரூ.240-க்கு விற்பனை செய்யப்பட்ட வரமிளகாய் ரூ.340 ஆகவும் உயர்ந்துள்ளது. அதேபோல், அரிசி விலை ரூ.80-ல் இருந்து ரூ.100 ஆகவும், பல்வேறு பருப்பு வகைகளின் விலை ரூ.30 முதல் ரூ.80 வரை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
கடந்த மூன்று மாதங்களில் சில பொருட்களின் விலை சுமார் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கும் நிலையில், விலையேற்றத்தால் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்து வியாபாரமும் மந்தமடைந்துள்ளது.
அன்றாடம் கூலி வேலைக்குச் செல்லும் சித்தாள் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் சிறு தொழில் செய்து பிழைப்பு நடத்தும் மக்கள், குறைந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்த முடியாமல் திணறி வருகின்றனர். வருமானம் உயராத நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை மட்டும் தொடர்ந்து உயர்வதால், வேறு வழியின்றி கூடுதல் விலை கொடுத்து பொருட்களை வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே பல்வேறு குடும்பச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தவித்து வரும் மக்களுக்கு இந்த விலையேற்றம் கூடுதல் சுமையாக மாறியுள்ளது.
எனவே, பொதுமக்களின் அன்றாட வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தவும், சந்தை விலைகளைக் கண்காணிக்கவும், ஏழை, எளிய மக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கவும் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.




You must be logged in to post a comment.