200-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரமான பனைத் தொழிலுக்கு ஆபத்து – செம்மண் அள்ளுவதால் வேர்கள் பாதிக்கப்பட்டு சாயும் நிலையில் மரங்கள்; குவாரி அனுமதியை மறுபரிசீலனை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு!
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறைகுளம் ஊராட்சியில், ராஜாக்கள் பாளையம் அருகே 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாகவும், தலைமுறை தலைமுறையாகப் பொருளாதார ஆதாரமாகவும் பனை மரங்கள் இருந்து வருகின்றன. இந்நிலையில், அப்பகுதியில் புதிதாகச் செம்மண் எடுப்பதற்குக் குவாரிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அங்குள்ள பனை மரங்கள் அழிவைச் சந்தித்து வருவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
குவாரிப் பணிகளுக்காகப் பெருமளவில் செம்மண் அள்ளப்படுவதால், பனை மரங்களைச் சுற்றியுள்ள மண் அகற்றப்பட்டு, அவற்றின் வேர்ப்பிடிப்புப் பகுதிகள் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் சில பனை மரங்கள் பட்டுப்போய் சாயும் நிலையில் இருப்பதாகவும், பல மரங்கள் வேர்ப்பகுதி பலவீனமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சில மரங்கள் ஏற்கெனவே சாய்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மரங்களை வெட்டாமல் விட்டாலும், அவற்றைத் தாங்கி நிற்கும் மண்ணையே அகற்றிவிட்டால் அந்த மரங்கள் எப்படிப் பாதுகாப்பாக நிற்கும் என்ற கேள்வியையும் பொதுமக்கள் எழுப்புகின்றனர்.
தமிழகத்தின் மாநில மரமாக விளங்கும் பனைமரம், இயற்கையின் கொடையாகவும், கிராமப்புற மக்களின் பொருளாதார முதுகெலும்பாகவும் திகழ்கிறது. பதநீர், நுங்கு, பனை வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனை ஓலைப் பொருட்கள், பனை நார் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றன.
குறிப்பாக, பனைத் தொழிலாளர்களின் உழைப்பில் கிடைக்கும் பதநீர், கருப்பட்டி, பனை வெல்லம் போன்றவை பாரம்பரிய உணவுப் பொருட்களாகவும், விற்பனைப் பொருட்களாகவும் உள்ளன. பனை ஓலைகள் மூலம் கூடை, பாய், பெட்டி உள்ளிட்ட கைவினைப் பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன.
.
தமிழக அரசு பனை மரங்களைப் பாதுகாக்கும் நோக்கில் கடந்த ஆண்டு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அரசாணை எண் 238-ஐ வெளியிட்டுள்ளது. அதன்படி, தவிர்க்க முடியாத சூழலில் பனை மரங்களை வெட்டுவதற்குக்கூட மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவின் முன் அனுமதி பெற வேண்டும். ஒவ்வொரு வெட்டப்படும் பனை மரத்திற்கும் மாற்றாக 10 பனை மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என்றும் வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டுள்ளன.
மேலும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவிலான குழுவும், வட்டார அளவில் கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்பட்டு பனை மரங்களின் பாதுகாப்பு மற்றும் வெட்டுதல் தொடர்பான நடவடிக்கைகளைக் கண்காணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில், பனை மரங்களை நேரடியாக வெட்டாமல் இருந்தாலும், அவற்றின் வேர்ப்பிடிப்புப் பகுதிகளைச் சேதப்படுத்தி மரங்கள் சாயும் நிலையை ஏற்படுத்தும் செயல்கள் குறித்து அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
செம்மண் அள்ளுவதற்காக வழங்கப்பட்டுள்ள குவாரி அனுமதியின் நிபந்தனைகள், சுற்றுச்சூழல் அனுமதி, சுரங்கப் பணித்திட்டம், நில எல்லைகள் மற்றும் மண் அகற்றப்படும் ஆழம் உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக, பனை மரங்களின் வேர்ப்பிடிப்புப் பகுதிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் பணிகள் நடைபெறுகின்றனவா என்பதையும் நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.
சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் கனிமவளத் துறை விதிமுறைகள் மீறப்பட்டிருப்பது ஆய்வில் தெரியவந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் பனை மரங்களைப் பாதுகாக்கவும், செம்மண் அள்ளும் திட்டத்தைக் கைவிடவும் வலியுறுத்தி ராஜாக்கள் பாளையம் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
மனுவில் தெரிவித்துள்ள கோரிக்கைகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை, கனிமவளத்துறை, வேளாண்மைத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் இணைந்து நேரில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஆய்வு முடியும் வரை சர்ச்சைக்குரிய பகுதியில் செம்மண் அள்ளும் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். சேதமடைந்த பனை மரங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு, அவற்றைப் பாதுகாக்கவும், மீண்டும் பனை மரங்களை வளர்க்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.
ஒருபுறம் பனை மரங்களை வளர்க்கவும், பனைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், மறுபுறம் செம்மண் அகற்றும் பணிகளால் ஏற்கெனவே வளர்ந்து நிற்கும் பனை மரங்கள் பாதிக்கப்படுவதாக எழுந்துள்ள புகார் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைக்கு ஒரு பனை மரம் சாய்ந்தால், அதற்குப் பதிலாக ஒரு புதிய பனை மரம் வளர்ந்து பயனளிக்கப் பல ஆண்டுகள் ஆகும். எனவே, வெறும் மரக்கன்றுகளை நட்டு கணக்குக் காட்டுவதுடன் இந்தப் பிரச்சினை முடிந்துவிடாது. ஏற்கெனவே வளர்ந்து நிற்கும் பனை மரங்களையும், அவற்றை நம்பி வாழும் குடும்பங்களின் எதிர்காலத்தையும் பாதுகாப்பதே அவசியம்.
மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சினையில் தலையிட்டு, உண்மை நிலையை வெளிப்படுத்தி, மக்களின் வாழ்வாதாரத்தையும் இயற்கை வளத்தையும் பாதுகாக்குமா? அல்லது பனை மரங்கள் ஒவ்வொன்றாகச் சாய்ந்த பிறகுதான் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதே ராஜாக்கள் பாளையம் கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.




You must be logged in to post a comment.