20 November 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரத்தில் ரூ.1.71 கோடி மதிப்பில் ரோட்டரி சங்கங்கள் சார்பில் நலத்திட்ட உதவிகள்!

ராமநாதபுரத்தில் ரூ.1.71 கோடி மதிப்பில் ரோட்டரி சங்கங்கள் சார்பில் நலத்திட்ட உதவிகள்!

எழுதியவர்: Baker BAker November 19, 2026, 3:05 pm

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை வசதி – பள்ளிகளுக்கும் பொதுமக்களுக்கும் பல்வேறு உதவிகள் வழங்கல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரோட்டரி சங்கங்கள் சார்பில் ரூ.1 கோடியே 71 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. கல்வி வளர்ச்சி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்டவற்றை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் இத்திட்டங்கள் பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, ராமநாதபுரம் ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டரி சங்கம் சார்பில், ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்களின் கல்வி மற்றும் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் ஸ்டீல் நாற்காலிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்ப வசதியுடன் கூடிய நவீன ஸ்மார்ட் கிளாஸ் போர்டு ஆகியவை வழங்கப்பட்டன. இவற்றை ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் தினேஷ் பாபு வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் ரோட்டரி ஆளுநர் தினேஷ் பாபு கூறியதாவது:

தமிழகத்தில் கல்வி மற்றும் அடிப்படை வசதிகளில் பின்தங்கியுள்ள பகுதிகளைக் கண்டறிந்து, அப்பகுதி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ரோட்டரி சங்கங்கள் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. குறிப்பாக, பள்ளிகளுக்குத் தேவையான மேசை, நாற்காலிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

வருங்காலத் தலைமுறையினர் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தரமான கல்வியைப் பெற்று வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதே ரோட்டரி சங்கங்களின் முக்கிய நோக்கமாகும். இதற்காக பல்வேறு ரோட்டரி சங்கங்கள் ஒருங்கிணைந்து மக்கள் நலப்பணிகளை மேற்கொண்டு வருகின்றன என்றார்.

கல்வி வளர்ச்சியை மையமாகக் கொண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் ரோட்டரி சங்கங்கள் மேற்கொண்டு வரும் இத்தகைய சமூகப் பணிகள், அரசுப் பள்ளிகள் மற்றும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த உதவும் முக்கிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் ராஜா மேல்நிலைப் பள்ளியின் செயலாளர் ராஜா நாகேந்திர சேதுபதி, ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டரி சங்கத் தலைவி டாக்டர் ரம்யா, செயலாளர் சௌந்தர்யா, துணை ஆளுநர் சுந்தரம், ரோட்டரி சங்க நிர்வாகி பொறியாளர் பாபு, வழக்கறிஞர் பார்த்தசாரதி, முன்னாள் ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டரி சங்கத் தலைவர் ஜெகன் அகிலன், செயலாளர் முகமது ராஃபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!