ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலம் தாலுகாவில் செயல்பட்டு வரும் கிளை நூலகம், பல ஆண்டுகளாகப் பூட்டியே கிடப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழகம் முழுவதும் அரசு நூலகங்களில் புத்தகக் கொள்முதல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆர்.எஸ். மங்கலம் கிளை நூலகம் பயன்பாடின்றி முடங்கிக் கிடப்பது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் நூலகம் அமைந்துள்ளதால், வாசகர்கள் சென்று புத்தகங்களைப் படிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் படிக்கட்டுகளில் ஏறிச் சென்று நூலகத்தைப் பயன்படுத்த முடியாத அவலநிலை நிலவுகிறது.
நூலகத்தைத் திறந்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரவும், தரைத்தளத்திற்கு மாற்றவும் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
புத்தகங்கள் மக்களைச் சென்றடைய வேண்டிய நூலகமே பூட்டிக்கிடப்பதா? எனக் கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள், மாவட்ட நிர்வாகமும் நூலகத் துறையும் உடனடியாகத் தலையிட்டு நூலகத்தைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.




You must be logged in to post a comment.