தமிழகத்தில் காணாமல் போகும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு: சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு!
சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;
செஞ்சி அருகே ஹேமாவதி என்னும் 7 வயது சிறுமி காணாமல் போய் 34 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை எவ்வித துப்பும் துலங்காதது வருத்தம் தருவதாகவே உள்ளது. குழந்தைகள் தினத்தை கொண்டாடும் நாளில் குழந்தைகள் நிலை என்ன? என சிந்திக்கும் போது இதுபோல சமீபகாலமாக தொடர்ந்து நடைபெறும் சம்பவங்கள் கவலை அளிப்பதாகவே உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2021ல் 6399 பேரும், 2022ல் 7009 பேரும் 2023ல் 7826 பேரும் 2024ல் 8032 பேரும் 2025ல் 8439 குழந்தைகளும் காணாமல் போயினர்.
கடந்த 2021 லிருந்து 2025 வரை சுமார் 32% அதிகரித்து உள்ள நிலையில் தமிழகத்தில் ஆண்டு தோறும் சுமார் 8000 குழந்தைகள் காணாமல் போகின்றனர். NCRB தரவுகளின் படி தமிழகம் காணாமல் போன குழந்தைகள் வழக்குகளில் முதல் 5 மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. 2026 செப்டம்பர் மாத நிலவரப்படி பல ஆண்டுகளாக கண்டுபிடிக்க இயலாத குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 742 (ஆண்.323/ பெண் – 419) என கூறப்படுகிறது. குறிப்பாக விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் காணாமல் போகும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.
குடும்ப சண்டை, படிப்பு அழுத்தம், வீட்டு சூழல், துன்புறுத்தல் காரணமாக வீட்டைவிட்டு ஓடுதல், கட்டாய திருமணம், பொய்யான வாக்குறுதியை நம்பி சென்று ஏமாறுதல், கடத்தல், திருவிழா, ரயில் நிலையத்தில் தொலைந்து போதல், பாலியல் சுரண்டல், வறுமை, தொழிலுக்காக அழைத்து சென்று அடிமைபடுத்துதல் ,ஆன் லைனில் பழகி வெளியேறுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குழந்தை வயதினர் காணாமல் செல்கின்றனர். இந்திய அளவில் இன்னும் சுமார் 48 ஆயிரம் குழந்தைகள் இன்னும் கண்டுபிடிக்கபடாத நிலையில் உள்ளனர்
உச்சநீதிமன்றம் சமீபத்தில் காணாமல் போன குழந்தைகள் தொடர்பான வழக்குகளை கடத்தல் என ஊகித்து நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டு உள்ளது. குழந்தைகளுக்கு எதிரான கடத்தல், விற்பனை, துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது. இருப்பினும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும், குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்களும் குறைந்ததாக தெரியவில்லை.
குழந்தைகள் ஆபத்தில் இருந்தால் அல்லது காணாமல் குழந்தை போனால் தெரிவிக்க ஹெல்ப் லைன் எண்.1098 அறிவிக்கப்பட்டு உள்ளது. குழந்தைகள் கடத்தலில் முதல் 4 முதல் 48 மணிநேரம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எனவே குறிப்பிட்ட நேரத்தில் தகவல் தெரிவிப்பதும், வழக்கு பதிவு செய்வதும் அவசர கால நடவடிக்கை எடுப்பதும் கண்டுபிடிக்க மிகவும் உதவிகரமாக இருக்கும். காணாமல் போன குழந்தைகளை விரைந்து மீட்கவும், இதுபோன்ற குற்றங்கள் நிகழாமல் தடுக்கவும், குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்யவும் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுப்பது அவசர அவசியம்.
தலைமைச் செயலகம், சமூக பொதுநல இயக்கம்.




You must be logged in to post a comment.