16 November 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லையில் ஒரே நாளில் ஒரு கோடி விதைப் பந்துகள்; பள்ளி மாணவிகள் சாதனை..

நெல்லையில் ஒரே நாளில் ஒரு கோடி விதைப் பந்துகள்; பள்ளி மாணவிகள் சாதனை..

எழுதியவர்: Abubakker Sithik November 15, 2026, 2:38 pm

தமிழக அரசின் திருநெல்வேலி மாவட்ட பள்ளிக் கல்வித் துறை மற்றும் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த விதைப்பந்து பிரச்சாரகர் திருமாறன் வழிகாட்டுதலின் படி ஒரே நாளில் ஒரு கோடி விதைப்பந்துகளை தயாரித்து நெல்லை பள்ளி மாணவிகள் புதிய சாதனை படைத்துள்ளனர்.

நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி மு. சிவகுமார் தலைமையில், முக்கூடல் பல் மருத்துவர் ஏகலைவன் முன்னிலையில் மாவட்டம் முழுவதும் 16 லட்சம் மாணவ மாணவியர் விதைப் பந்துகளை செய்து குவித்தனர். மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் விதைப்பந்து செய்முறையை பார்ப்பதற்காக பாளை குழந்தை இயேசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வருகை புரிந்தார். விதைப்பந்து தயாரிக்கும் முறை, வீசும் இடங்கள் அது நிகழ்த்தப் போகும் அற்புதம் முதலியவற்றை சிஇஓ சிவகுமார், பள்ளித் தலைமையாசிரியை அற்புதமேரி, விதைப்பந்து பிரச்சாரகர் வெங்காடம்பட்டி பூ. திருமாறன் கலெக்டரிடம் விளக்கமாக எடுத்துரைத்தனர்.

ஒரு மாணவிக்கு நூறு விதைப்பந்துகள் செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டதால் 3000 மாணவிகள், 3 லட்சம் விதைப் பந்துகளை, 3 மணி நேரத்தில் செய்து முடித்தனர். அதே சமயத்தில் பல பள்ளிகள் ஒரே நேரத்தில் மாணவ மாணவியரை பள்ளித் திடலில் அமர வைத்து மண்ணையும், விதைகளையும் ஒருங்கிணைத்து விதைப்பந்துகள் செய்தனர். செய்த விதைப்பந்துகளை அடுத்த வாரம் இடம் பார்த்து வீச பள்ளித் தலைமைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவ மாணவியர் வாழும் பகுதிகள், கிராமப்புற காலியிடங்கள், சாலையோரம், குளக்கரை, நீர் பிடிப்பு பகுதி, பொத்தை, மலையடிவாரம், நெடுஞ்சாலை ஓரங்கள் என விதைப்பந்துகள் வீசப்படுகிறது. பல பள்ளிகள் விதைப்பந்து எறிவதையும் ஒரு முகாம் போல, சுற்றுலா செல்வது போல செய்வர். இந்திய தேசத்திற்கு மட்டுமல்ல, இந்த உலகத்திற்கே இந்த விதைப்பந்து தயாரிப்பு நிகழ்வு ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழக பள்ளிகளில் திருமாறன் ஆற்றி வந்த விதைப்பந்து விழிப்புணர்வை அறிந்த திருநெல்வேலி சிஇஓ சிவக்குமார் இதனை தற்போது பள்ளிகளின் பேராதரவுடன் அமல்படுத்தியுள்ளார். மாணவிகள் மட்டுமல்ல கலெக்டர் ஆனந்த் மோகன், சிவக்குமார், திருமாறன் என யாவருமே மண்ணோடும் விதைகளோடும் உறவாடியதைக் காண முடிந்தது. திருநெல்வேலியில் நடந்த இந்த திருப்புமுனை அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

மேலும் இது போன்ற விதைப்பந்து புரட்சி ஒவ்வொரு மாவட்டத்திலும் நடந்தால் எத்தனை சூப்பர் எல்நினோ வந்தாலும் மனிதர்களுக்கு பாதிப்பு நேராது. நவம்பர் 16 முதல் 20 வரை மெட்ரிக் பள்ளிகள் விதைப்பந்துகள் செய்ய தனியார் பள்ளிகளின் டிஇஓ சதீஷ் கிங்ஸ்லி ஏற்பாடுகள் செய்து வருகிறார். எந்தெந்த பள்ளிகள் என்னென்ன எண்ணிக்கையில் விதைப்பந்துகள் செய்து வருகின்றனர் என்ற புள்ளி விவரங்களை சிஇஓ அலுவலக வளர்மதி திரட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!