14 November 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பாக ஆணைய பரிந்துரைப்படி அதிகாரிகள் மீது இன்னும் அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? சமூக பொதுநல இயக்கம் கேள்வி!

தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பாக ஆணைய பரிந்துரைப்படி அதிகாரிகள் மீது இன்னும் அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? சமூக பொதுநல இயக்கம் கேள்வி!

எழுதியவர்: Askar November 13, 2026, 7:51 pm

தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பாக ஆணைய பரிந்துரைப்படி அதிகாரிகள் மீது இன்னும் அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? சமூக பொதுநல இயக்கம் கேள்வி!

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது கடந்த 22.5.2018 அன்று காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிர் இழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அப்போதைய அ.தி.மு.க அரசு மறுநாளே இதுதொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தது. ஆணையம் இச்சம்பவம் தொடர்பாக விசாரித்து 3000 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையினை 18.5.2022ல் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தது. இது 18.10.2022 அன்று சட்டபேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

குறிப்பிட்ட ஆணையம் தென்மண்டல ஐ.ஜி.சைலேஷ்குமார், டி.ஐ.ஜி கபில்குமார் சரத்கர், எஸ்.பி.மகேந்திரன், டி.எஸ்பி. லிங்க திருமகன், இன்ஸ்பெக்டர்கள் திருமலை, ஹரிஹரன், பார்த்திபன், உள்பட 17 காவல்துறை அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தது. இதுபோல் மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், வருவாய்துறை அதிகாரிகள் 3 பேர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கும்படியும் அறிவுறுத்தியது. CBI விசாரணைக்குப் பின் இன்ஸ்பெக்டர் திருமலை மீது மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில் ஏனைய நபர்கள் யார்மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஒரு சில கீழ்நிலை ஊழியர்கள் மட்டும் இடைநீக்கம் செய்யப்பட்டார்களே தவிர ஆணைய பரிந்துரைப்படி அரசுத்துறை அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கும் முடிவை முந்தைய அரசு கைவிட்டது. தற்போது ஆட்சிமாற்றம் நடைபெற்று உள்ள நிலையில் அருணா ஜெகதீசன் அறிக்கையின் படி தற்போதைய ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 11.11.26 அன்று முதல்வர்.விஜய் துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்த 13 குடும்பத்தினருக்கு தலா ரூ 25 லட்சமும், காயம் அடைந்த 40 பேருக்கு தலா ரூ 5 லட்சமும் வழங்குவதாக அறிவித்தார். ஆனால் அதிகாரகள் மீதான நடவடிக்கை தொடர்பாக தொடர்ந்து மௌனம் சாதிப்பதால் ஆணைய பரிந்துரையினை இவர்களும் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவார்கள் என்றே தெரிகிறது.

ஆணையத்தின் அறிக்கை அடிப்படையில் கடந்த காலங்களில் போராட்டகாரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட 38 வழக்குகள் திரும்ப பெறப்பட்டு உள்ளது. ஆனால் இன்னும் 100 போராட்டகாரர்கள் மீதான வழக்குகள் திரும்ப பெறப்படாத நிலையில் நிலுவையில் உள்ளது. இதனால் பாஸ்போர்ட், வேலை, கல்வி உள்ளிட்டவற்றிற்கான காவல்துறையின் NOC சான்று பெற இயலாமல் கடும் சிரமத்திற்கும், வீண் அலைச்சலுக்கும், மன உளைச்சலுக்கும் இவர்கள் உள்ளாகி வருகின்றனர்.

நீதிபதி. அருணா ஜெகதீசன் அறிக்கையின் பரிந்துரைப்படி போராட்டகாரர்கள் மீதான வழக்குகளை முழுமையாக திரும்ப பெற வேண்டும். மேலும் துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்பு உடைய அரசுத்துறை அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்வதோடு அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கையும் எடுக்க வேண்டும். காலம் கடந்த நீதி அநீதிக்கு சமம் ஆனது. எனவே குற்றம் இழைத்தவர்கள் எவர் ஆனாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து நீதியினை நிலை நாட்ட வேண்டும். தமிழக அரசு இவ்விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுப்பது அவசர அவசியம்.

தலைமைச் செயலகம், சமூக பொதுநல இயக்கம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!