கொடைரோடு அருகே, ஹோட்டலில் கண்டெடுக்கப்பட்ட பணத்தை கொடுக்க மறுத்ததால், திமுக பிரமுகர் வெட்டி படுகொலை. 3 பேர் கைது. ஒருவர் நீதிமன்றத்தில் சரண்.
கொடைரோடு அருகே, ஹோட்டலில் கண்டெடுக்கப்பட்ட பணத்தை கொடுக்க மறுத்ததால், புதன்கிழமை திமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே நாகையகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (52) திமுக பிரமுகரான இவரும், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த அஜித்குமார் (26) என்பவரும் கடந்த, 2-ம் தேதி கொடைரோட்டில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது டேபிளுக்கு அடியில் ரூபாய் 25 ஆயிரம் கிடந்துள்ளது. அதனை அஜித்குமார் எடுத்த போது, அந்தப் பணத்தை பெற்றுக்கொண்ட, திமுக பிரமுகர் லட்சுமணன், அது யாருடைய பணம் என, விசாரித்து அவர்களிடம் கொடுத்து விடலாம் என, கூறியுள்ளார்.
ஆனால், அந்த பணத்தை லட்சுமணன் யாரிடமும் கொடுக்காததால், மறுநாள் 3-ம் தேதி, லட்சுமணனின் வீட்டிற்கு சென்ற அஜித்குமார், தான் ஹோட்டலில் கண்டெடுத்து கொடுத்த ரூபாய் 25 ஆயிரத்து பணத்தை கேட்டுள்ளார். அப்போது, லட்சுமணன், அவரது மகன் உதயகுமார் (30) இருவரும் அஜித்குமாரை கடுமையாக அடித்து, தாக்கி பணத்தை கொடுக்க மறுத்து விட்டனர். இதனால், ஆத்திரமடைந்த அஜித்குமார், இதுகுறித்து தனது நண்பர்கள், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த
பிச்சைமுத்து (எ) மூக்கையா (30), ஜல்லிபட்டியை சேர்ந்த கலைஞர் (எ) ரஞ்சித்குமார் (30) மற்றும் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த வாசுதேவன் (23) ஆகியோரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இவர்கள் திமுக பிரமுகர் லட்சுமணனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.அதன்படி புதன்கிழமை, லட்சுமணன் மைக்கேல்பாளையத்திலிருந்து நாகையகவுண்டம்பட்டிக்கும் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, சில்லலபட்டி அருகே பிச்சைமுத்து (எ) மூக்கையா, கலைஞர் (எ) ரஞ்சித்குமார் மற்றும் வாசுதேவன் ஆகிய மூன்று பேரும் லட்சுமணனை வழிமறித்து பட்டா கத்தியால் சரமாரியாக வெட்டி தலையை சிதைத்து படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு தீவிர விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் குறித்து அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து, கொலை சம்பவம் நடைபெற்று ஒரு மணி நேரத்திற்குள், கொலையாளிகள் பிச்சைமுத்து (எ) மூக்கையா, கலைஞர் (எ) ரஞ்சித்குமார் மற்றும் வாசுதேவன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். இக்கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அஜித்குமார் நிலக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தின் சரண் அடைந்துள்ளார். இவ்வழகில் கைது செய்யப்பட்ட, பிச்சைமுத்து (எ) மூக்கையா மீது ஒரு கொலை வழக்கு உட்பட இரண்டு வழக்குகளும், கலைஞர் (எ) ரஞ்சித்குமார் ஒரு கஞ்சா வழக்கு உட்பட இரண்டு வழக்குகளும், வாசுதேவன் மீது ஒரு மதுவிலக்கு வழக்கு உள்ளது.
கொடைரோடு அருகே ஹோட்டலில் கண்டெடுக்கப்பட்ட பணத்தை கொடுக்க மறுத்ததால், திமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




You must be logged in to post a comment.