கடலில் தவறி விழுந்த மகன் பத்திரமாக மீட்பு – நீரோட்டத்தில் சிக்கிய தந்தையைத் தேடும் கடலோரக் காவல் படையினர் மற்றும் சக மீனவர்கள்!
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, பாசிப்பட்டினம் கடற்கரை கிராமத்தில் மகனைக் காப்பாற்ற கடலில் குதித்த மீனவர் தந்தை நீரோட்டத்தில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாசிப்பட்டினத்தைச் சேர்ந்த சந்தனமாரி (35) என்ற மீனவர், தனது மகன்கள் காளீஸ்வரன், சரத் ஆகியோருடன் இன்று அதிகாலை 4 மணியளவில் தங்களுக்குச் சொந்தமான நாட்டுப்படகில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக மகன் சரத் படகிலிருந்து தவறி கடலில் விழுந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சந்தனமாரி, தனது மகனைக் காப்பாற்றும் நோக்கில் உடனடியாகக் கடலில் குதித்துள்ளார்.
ஆனால், அங்கு ஏற்பட்ட கடுமையான நீரோட்டத்தில் சந்தனமாரி இழுத்துச் செல்லப்பட்டு மாயமானார்.
இதற்கிடையே, அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் விரைந்து செயல்பட்டு கடலில் விழுந்த சரத்தைப் பத்திரமாக மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். அவர் தற்போது நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகனைக் காப்பாற்றச் சென்ற தந்தை கடலில் மாயமான தகவல் அறிந்ததும், கடலோரக் காவல் படையினரும் சக மீனவர்களும் இணைந்து சந்தனமாரியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மகன் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், அவரைக் காப்பாற்றச் சென்ற தந்தை கடலில் மாயமான சம்பவம் பாசிப்பட்டினம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கடலில் மாயமான சந்தனமாரியை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.




You must be logged in to post a comment.